/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
/
அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : மே 07, 2024 11:23 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஜோதிலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவிலில், பக்த ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திக்கு பால், இளநீர், தேன், தயிர், திருமஞ்சனப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சள் துாள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிேஷக பொருட்களால் அபிேஷகம் நடைபெற்றது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.
* உடுமலை அருகே, சின்னபொம்மன்சாளையில் உள்ள செல்வமாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

