ADDED : ஆக 05, 2026 08:11 PM
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே ரெயான் நகர் பகுதியில், சத்தியமங்கலம் சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடப்பதால், வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றன. மைசூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள், ரெயான் நகர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வருகின்றன. ரெயான் நகர் பகுதியில் உள்ள மாதேஸ்வரன் மலை அருகே, சிறுமுகை சாலை மேடாக உள்ளது. அதனால் சிறுமுகையில் இருந்து வரும் வாகனங்கள், மேடான பகுதியில் ஏறி, கீழே இறங்கும் போது வேகமாக செல்கின்றன. அதேபோன்று சத்தியமங்கலம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், மேடான பகுதிக்கு செல்ல வேகமாக வருகின்றன. சத்தியமங்கலம் பிரதான சாலையில், வாகனங்கள் வேகமாக வருவது ஒரு பக்கம் இருக்க, ரெயான் நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வாகனங்கள் சத்தியமங்கலம் சாலைக்கு வரும் போது விபத்து ஏற்படுகிறது.
மாதேஸ்வரன் மலை பகுதி மக்கள் கூறியதாவது:
சத்தியமங்கலம் சாலை, ரெயான் நகர் சாலை சந்திக்கும் இடத்தில், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த மாதம், ஏழு வாகன விபத்துகள் ஏற்பட்டன. இதில் ஒருவர் பலியானார்; ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர். மூவர் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகன விபத்துகள் நடக்காமல் இருக்க, சத்தியமங்கலம் சாலையில், ரெயான் நகர் பிரிவு சாலையில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், நடவடிக்கை இல்லை. பெரியளவில் வாகன விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ரெயான் நகர் பகுதியில் உள்ள சத்தியமங்கலம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
