/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைப்புதுாரில் வேகத்தடை அமைக்க வேண்டும்!
/
கோவைப்புதுாரில் வேகத்தடை அமைக்க வேண்டும்!
ADDED : மே 14, 2024 01:40 AM

ஆபத்தான நிலையில் மின்கம்பம்
கே.கே.புதுார், சாய்பாபாகாலனி, ஐந்தாவது வார்டு, நான்காவது வீதியில், மின்கம்பம் ஒன்று மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள கம்பத்தை மாற்ற வேண்டும்.
- லெனின், சாய்பாபாகாலனி.
விபத்தை தடுக்க வேகத்தடை
கோவைப்புதுார், பஸ் டெர்மினல் நான்குமுனை சந்திப்பில், புதிய தார் சாலை அமைக்க, வேகத்தடை எடுக்கப்பட்டது. இப்பகுதியில், தினமும் ஒரு விபத்து ஏற்படுகிறது. உயிரிழப்புகள் ஏற்படும் முன் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- சுசீலா, கோவைப்புதுார்.
சேற்றில் மாட்டும் வாகனங்கள்
ஜி.என்.மில்ஸ், ஜே.எம்.வி., கார்டனில், மண் சாலை மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுகிறது. வாகனங்களின் சக்கரங்கள் அடிக்கடி சேற்றில் மாட்டிக்கொள்கின்றன. தார் சாலை அமைத்து தர, பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.
- சுரேஷ், ஜி.என்.மில்ஸ்.
குடிநீரின்றி தவிப்பு
வடவள்ளி, டாட்டா நகர், கிழக்கு கிராஸ், இரண்டாவது வீதியில், 15 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. போர்வெல் இல்லாத வீடுகளில் வசிப்போர், போதிய தண்ணீரின்றி மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். போர் பிரச்னை, குழாய் உடைந்துவிட்டது என, காரணங்களை மட்டும் அதிகாரிகள் அடுக்குகின்றனர்.
- சரண், வடவள்ளி.
வெயில், மழையில் பயணிகள்
பெரியநாயக்கன்பாளையம் காஸ் கம்பெனி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதியில்லை. வெயில் மற்றும் மழையில், பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். வயதானவர்கள் உட்கார வசதியில்லாததால், நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
- சோமசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம்.
குப்பை தேக்கம்
கோவைப்புதுார், 90வது வார்டில், சாலையோரம் தென்னை மர ஓலைகள் உள்ளிட்ட குப்பை சாலையில் பெருமளவு குவிந்துள்ளது. மழைக்காலத்தில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும்.
- தேவகி, கோவைப்புதுார்.
சகதியாக மாறிய சாலை
துடியலுார், கே.என்.ஜி.புதுார் ரோடு, பி.எம்.பி., ரெசிடென்சி குடியிருப்பு வளாகத்தில், பாதாள சாக்கடை பணிக்காக ரோடு தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து, சாலையை தார் ஊற்றி சீரமைக்கவில்லை. மண்ணாக இருக்கும் சாலை மழைநீரில் சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
- செல்வக்குமார், துடியலுார்.
கடும் துர்நாற்றம்
டாடாபாத், எட்டாவது வீதி, ஓசோன் கம்ப்யூட்டர்ஸ் எதிரே, சாலையில் குப்பை மற்றும் இலை சருகுகள் பல வாரங்களாக தேங்கியுள்ளன. சிலர் உணவுகளையும் இப்பகுதியில் போட்டுச்செல்கின்றனர். கடும் துர்நாற்றம் வீசுவதால், விரைந்து குப்பையை அகற்ற வேண்டும்.
- கிருஷ்ணா, டாடாபாத்.
குறுகலான சாலையில் குழிகளும்
ஒண்டிப்புதுார், சூர்யா நகர், ரயில்வே கிராசிங் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மோசமாக சேதமடைந்த சாலை, முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. பைக்கில் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
- நாராயணன், சிங்காநல்லுார்.

