/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை... வேகப்படுத்துங்க! நெடுஞ்சாலைத்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
/
மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை... வேகப்படுத்துங்க! நெடுஞ்சாலைத்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை... வேகப்படுத்துங்க! நெடுஞ்சாலைத்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை... வேகப்படுத்துங்க! நெடுஞ்சாலைத்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மே 06, 2024 01:33 AM

கோவை:கோவை - அவிநாசி ரோட்டில் கட்டப்படும் மேம்பால பணிகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த, நெடுஞ்சாலைத்துறையினருக்கு, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. வரும் டிச., மாதத்துக்குள் பணியை முழுமையாக முடிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவது; மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இடம் மாற்றுவது; குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்களை வேறிடத்தில் மாற்றிப் பதிப்பது உள்ளிட்ட வேலைகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இப்பணிகளை விரைவுபடுத்துவதற்கு, அரசு துறைகள் ரீதியான கலந்தாய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது; கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) தலைமை பொறியாளர் பாலமுருகன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
கமிஷனர் உறுதி
பி.ஆர்.எஸ்., மைதானம் முன் ஏறுதளம் அமைக்க, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்களை மாநகராட்சி மாற்றிப்பதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது; இப்பணியை இம்மாத இறுதிக்குள் முடித்து தருவதாக, கமிஷனர் உறுதியளித்தார்.
நவ இந்தியா - லட்சுமி மில்ஸ் இடைப்பட்ட பகுதியில் சங்கனுார் பள்ளம் குறுக்கே உள்ள பாலம் அகலப்படுத்தப்படுகிறது. அப்பகுதியில் மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை அகற்றிக் கொடுக்க மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
நிலம் கையகப்படுததும் பணி
இன்னும் நிலம் கையகப்படுத்திக் கொடுக்காததால், அண்ணா சிலை அருகே ஏறுதளம், ஹோப் காலேஜ் அருகே இறங்கு தளம் அமைக்கும் பணி இன்னும் துவங்கவே இல்லை என தெரிவிக்கப்பட்டது.
பத்திரப்பதிவு பணிகள் துவங்கி விட்டது; மூன்று மாதத்துக்குள் தேவையான நிலங்கள் கையகப்படுத்திக் கொடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை நிலம் கையகப்படுத்தும் பிரிவினர் உறுதி தெரிவித்தனர்.
போக்குவரத்து மாற்றம்
ஹோப்ஸ் காலேஜ் ரயில்வே மேம்பாலம் பகுதியில் துாண் எழுப்ப துளையிட வேண்டியிருப்பதால், வாகன போக்குவரத்து மாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குழு, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மீண்டும் ஆய்வு செய்து, தேவையான இடங்களில் பயணிகள் நிழற்கூரைகள் அமைக்க, கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஷர்மிளா, ஜீவா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் சமுத்திரக்கனி, மனுநீதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.