/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்னும் திறக்கவே இல்லை... அதற்குள் பாலத்தில் வெடிப்பு! ஒப்பந்த நிறுவனத்துக்கு பறந்தது நோட்டீஸ்
/
இன்னும் திறக்கவே இல்லை... அதற்குள் பாலத்தில் வெடிப்பு! ஒப்பந்த நிறுவனத்துக்கு பறந்தது நோட்டீஸ்
இன்னும் திறக்கவே இல்லை... அதற்குள் பாலத்தில் வெடிப்பு! ஒப்பந்த நிறுவனத்துக்கு பறந்தது நோட்டீஸ்
இன்னும் திறக்கவே இல்லை... அதற்குள் பாலத்தில் வெடிப்பு! ஒப்பந்த நிறுவனத்துக்கு பறந்தது நோட்டீஸ்
ADDED : மே 10, 2024 02:05 AM

கோவை;உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தில், செல்வபுரம் பைபாஸ் இறங்கு தளத்தில் ஆங்காங்கே தார் ரோடு விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆய்வு பணியில் நேற்று ஈடுபட்டிருந்த, மாநில நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலப் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட இவ்வேலை, வாகன போக்குவரத்துக்கு இடையே மேற்கொள்வதால், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மெல்ல மெல்ல செய்யப்படுகிறது.
பணிகள் விறுவிறு
உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் ஏறு தளம், இறங்கு தளம், ஆத்துப்பாலம் சந்திப்பில் பாலக்காடு ரோட்டில் இருந்து ஏறு தளம், பாலக்காடு ரோட்டுக்குச் செல்வதற்கான இறங்கு தளம் பணிகள் முடிந்து விட்டன.
உக்கடத்தில் இருந்து பாலத்தில் செல்வோர் பொள்ளாச்சி ரோட்டில் இறங்குவதற்கு இறங்கு தளம் அமைத்து, ரோட்டின் மையத்தடுப்பு அமைக்க வேண்டும். இப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
விடுபட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் கட்டப்படுகின்றன. ஆத்துப்பாலம் சந்திப்பில் பழைய பாலத்தில் கைப்பிடிச்சுவர் இடிக்கப்பட்டு, நடைபாதையுடன் புதிதாக சுவர் கட்டப்படுகிறது.
இறங்குதள பணியில் வேகம்
ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர், வாலாங்குளம் ரோட்டுக்கு செல்ல, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வலதுபுறம் திரும்பும் வகையில் இறங்கு தளம் அமைக்கப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழக பணிமனையின் ஒரு பகுதியில் அணுகு சாலை அமைக்க, அங்குள்ள மூன்று மாடி கட்டடம் இடிக்கப்படுகிறது. தொழிலாளர்களை கூடுதலாக நியமித்து, இரவு பகலாக பணி மேற்கொண்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு. மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளை, மற்ற கோட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள், உள்தணிக்கை செய்வது வழக்கம்.
சில நாட்களுக்கு முன், அவிநாசி ரோடு மேம்பாலப் பணியை, திருப்பூரை சேர்ந்த அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
பாலத்தில் வெடிப்பு
உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணியை, சேலம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.
கோவை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர், மேம்பால வேலைகளை விளக்கினர்.ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர், செல்வபுரம் பைபாஸில் இறங்குவதற்கு அமைத்துள்ள அணுகுசாலையில் சில இடங்களில், தார் ரோட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுப்பாலம் இன்னும் பயன்பாட்டுக்கே வரவில்லை. அதற்குள் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு இருந்ததால், உள்தணிக்கை குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை சரி செய்ய, ஒப்பந்த நிறுவனத்தினருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
உக்கடம் முதல் கரும்புக்கடை வரை வர்ணம் பூசும் பணியை விரைந்து துவக்கவும், அனைத்து பணிகளையும், ஜூன், 30க்குள் முடிக்கவும் உயரதிகாரிகள் அறிவுறுத்தினர்.