/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் சிந்தனையை சிதறவிடக்கூடாது! கல்லுாரி ஆண்டு விழாவில் 'அட்வைஸ்'
/
மாணவர்கள் சிந்தனையை சிதறவிடக்கூடாது! கல்லுாரி ஆண்டு விழாவில் 'அட்வைஸ்'
மாணவர்கள் சிந்தனையை சிதறவிடக்கூடாது! கல்லுாரி ஆண்டு விழாவில் 'அட்வைஸ்'
மாணவர்கள் சிந்தனையை சிதறவிடக்கூடாது! கல்லுாரி ஆண்டு விழாவில் 'அட்வைஸ்'
ADDED : மார் 04, 2025 11:31 PM

வால்பாறை; படிக்கும் வயதில் மாணவர்கள் சிந்தனைகளை சிதற விடக்கூடாது என கல்லுாரி ஆண்டு விழாவில் டி.எஸ்.பி., கூறினார்.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நுண்கலைவிழா, விளையாட்டு விழா மற்றும் கல்லுாரி ஆண்டு விழா, என, முப்பெரும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
விழாவில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி பேசும்போது, ''கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.
மலைப்பகுதியில் வசதிகள் குறைவாக இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைக்கும் மாணவர்களுக்கு நகராட்சி சார்பில் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி, வால்பாறை டி.எஸ்.பி., ஸ்ரீநிதி பேசியதாவது:
கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவ பருவத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் உயர்த்த நிலையை அடைய வேண்டும்.
உங்களிடையே ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். மாணவ பருவத்தில் எந்த ஒரு தீய பழக்க வழக்கத்துக்கும் ஆளாகாமல், மாணவர்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். படிக்கும் வயதில் மாணவர்கள் சிந்தனைகளை சிதறவிடக்கூடாது. கல்வியில் கவனம் செலுத்தி, சிறந்த மாணவர்களாக வெளிவர வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
விழாவில், மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் செல்வம் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர்(பொ) அசோக்குமார் நன்றி கூறினார்.

