/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்லடம் மூவர் கொலை வழக்கில் திணறல்; அப்பாவிகளை மிரட்டியதா போலீஸ்?
/
பல்லடம் மூவர் கொலை வழக்கில் திணறல்; அப்பாவிகளை மிரட்டியதா போலீஸ்?
பல்லடம் மூவர் கொலை வழக்கில் திணறல்; அப்பாவிகளை மிரட்டியதா போலீஸ்?
பல்லடம் மூவர் கொலை வழக்கில் திணறல்; அப்பாவிகளை மிரட்டியதா போலீஸ்?
ADDED : பிப் 22, 2025 08:30 AM

திருப்பூர்; பல்லடம் அருகே மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைக் கண்டறிய முடியாததால், அப்பாவிகளைத் துப்பாக்கிமுனையில் மிரட்டி, துன்புறுத்துவதாக போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டது.
''சந்தேகப்படும் நபர்களிடம் முறையான சம்மன் வழங்கி விசாரணை நடத்தப்படுகிறது. ஆதாரம் இன்றி யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள்'' என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் கூறினார்.
திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78. விவசாயி.
இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோருடன், கடந்த, நவ., 28ம் தேதி இரவு தெய்வசிகாமணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க டி.ஐ.ஜி., - எஸ்.பி., கண்காணிப்பில், 14 தனிப்படை மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்ய, 12 எஸ்.ஐ., கள் நியமிக்கப்பட்டனர். கொலை நடந்து, மூன்று மாதங்களை நெருங்கும் நிலையிலும், கொலையாளிகளை போலீசார் கண்டறிய இயலவில்லை.
கொலை நடந்த தினத்தில் இருந்து தற்போது வரை, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தோட்டத்தில் வேலை செய்தவர்கள், பழைய தொழிலாளர்கள், அவர்களுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தவர்கள் என, நுாறுக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்தனர். சந்தேகப்படும் நபர்கள் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
''விசாரணை துவக்கம் முதலே குறிப்பிட்ட சிலரிடம் போலீசார் விசாரிக்க முற்படும் போது, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வேலையை செய்கின்றனர்; விசாரிக்கப்படுபவர்கள் மூலம் கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பப்படுகின்றன.
சுதந்திரமாக விசாரணையை மேற்கொள்வதில் தடையாக உள்ளது'' என்று போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துப்பாக்கி முனையில் மிரட்டலா?
திருப்பூரில், வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து, கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தி துப்பாக்கி முனையில் மிரட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் போலீசார் மீது குற்றம்சாட்டி எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தனித்தனியாக புகார் மனுக்களை அளித்தனர்.
போலீஸ் உடனடி மறுப்பு
''விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களிடம், உரிய மரியாதையுடனும், எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் சட்டப்படி விசாரணை நடக்கிறது; வழக்கை திசை திருப்ப உண்மைக்கு புறம்பான தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது'' என்று, இதற்கு உடனடியாக திருப்பூர் மாவட்ட போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி பழங்குடி மக்களை போலீசார் மிரட்டுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
புகார் கூறிய மக்களிடம் விளக்கம்: எஸ்.பி.,
திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் நமது நிருபரிடம் கூறுகையில், ''மூவர் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பலரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது எழுந்த புகார் தொடர்பாக, மனு கொடுத்த மக்களிடம் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது. உரிய முறையில் சம்மன் வழங்கப்பட்டு தான் விசாரணைக்கு அழைக்கப்படுகிறது. யாரும் துன்புறுத்தப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இல்லாமல், யாரையும் கைது செய்ய முடியாது.
போலீஸ் விசாரணை முறையாக நடக்கிறது'' என்றார்.