/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடித்தோட்டத்துக்கு மானிய திட்டம்
/
மாடித்தோட்டத்துக்கு மானிய திட்டம்
ADDED : ஆக 28, 2024 11:45 PM
உடுமலை: மாடித்தோட்டம் அமைத்து பராமரிக்க, மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், தோட்டக்கலைத்துறை வாயிலாக மாடித்தோட்ட 'கிட்' வழங்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக அரசின், தோட்டக்கலைத்துறையில், தேசிய தோட்டக்கலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு மானியங்களும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், காய்கறி உற்பத்தியை பெருக்கும் வகையிலும், மாடித்தோட்டங்கள் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தோட்டக்கலைத்துறையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான 'கிட்' மானியத்தில் வழங்கப்பட்டது.
அதில், தென்னை நார்க்கழிவுகள் அடங்கிய, 6 'குரோபேக்', பத்து வகையான காய்கறி விதைகள் மற்றும் உயிர் உரங்கள், மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்த கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த 'கிட்', மானிய விலையில், வழங்கப்பட்டதால், அதிகளவிலான மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்பெற்றனர்.
உடுமலை சுற்று வட்டாரங்களில், மட்டும், ஒரே சீசனில், 500க்கும் அதிகமான மாடித்தோட்ட, 'கிட்' வினியோகமானது. அதன்பின்னர், அத்திட்டத்துக்கு போதிய முக்கியத்துவம், அரசால் அளிக்கப்படவில்லை.
பல்வேறு பலன்களை உள்ளடக்கிய மாடித்தோட்டம் அமைக்க இத்தருணத்தில், தோட்டக்கலைத்துறை உதவ வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, மானிய விலையில், மாடித்தோட்ட, 'கிட்' வினியோகிக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.