/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆள் இறங்கும் குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி
/
ஆள் இறங்கும் குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி
ஆள் இறங்கும் குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி
ஆள் இறங்கும் குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி
ADDED : மே 02, 2024 11:32 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி, ரோட்டில் செல்வதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது முதல், தினமும் பிரச்னைகள் மட்டுமே அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் மக்கள் பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
தற்போது ஆங்காங்கே இணைப்பு கொடுக்கப்பட்ட வீடுகளுக்கே கழிவுநீர் திரும்பி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
நகரப்பகுதியில் ஆங்காங்கே ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, கோரிக்கை விடுத்தும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி - உடுமலை ரோடு மின்வாரிய அலுவலகம் அருகே, பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து, கழிவுநீர் அவ்வப்போது அதிகளவு வெளியேறுகிறது.
நேற்றும் கழிவுநீர் வெளியேறியதால் அப்பகுதியே கடும் துர்நாற்றமாக இருந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், மூக்கை பிடித்து ஓட்டம் பிடிக்கும் சூழல் காணப்பட்டது.
நடந்து செல்வோர், கழிவுநீரை கடந்து செல்லும் போது முகம் சுளித்துச் சென்றனர். இது போன்ற பிரச்னைகளை தீர்க்க நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.