/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலையில்லாதவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தகவல்
/
வேலையில்லாதவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தகவல்
வேலையில்லாதவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தகவல்
வேலையில்லாதவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தகவல்
ADDED : ஆக 29, 2024 08:00 PM

வடவள்ளி:''படித்து முடித்து வேலை வாய்ப்பில்லாதவர்களுக்காக புதிய திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார்,'' என, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டம் குறித்து, கல்லுாரி தலைவர்களுடனான மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம், பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசியதாவது:
நான் முதல்வன் திட்டம் இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு துவங்கியுள்ளது. நாங்கள், நிறுவனங்களின் மனித வள அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, தற்போது எந்த திறமைகளுக்கான தேவைகள் அதிகமாக உள்ளது என்பதை கேட்டறிந்து அதற்கு ஏற்ப பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
அனைத்து நிறுவனங்களும், தடுமாற்றமின்றி ஆங்கிலம் பேசுபவர்களையே விரும்புகின்றன. பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் தடுமாற்றம் உள்ளது. அதனால், முதல் செமஸ்டரில் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சி அளிக்கிறோம். இனி, இந்த ஆங்கில பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, டிஜிட்டல் பயிற்சி அளிக்கப்படும்.
பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மற்றும் கல்லுாரி படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்காக, புதிய திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார். நான் முதல்வன் திட்ட கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள், ஆன்லைன் கூட்டங்களின், 60 முதல் 65 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கல்லுாரிகளில் மாணவர்கள் இடைநிறுத்தம் செய்தால், அதுவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் பயிற்சியே எதிர்காலம். ஆன்லைன் பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலலுாரி முதல்வர்கள், வாரத்தில் ஒரு மணி நேரமாவது, நான் முதல்வன் கல்லுாரி ஒருங்கிணைப்பாளரிடம் நேரம் செலவழிக்க வேண்டும். பல அரசு கல்லுாரிகளில் வேலைவாய்ப்பு பிரிவு என்பதே இல்லை. அதை உருவாக்கி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்த முழு விவரங்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நான் முதல்வன் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கல்லுாரிகளின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.