/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூடிய ரயில்வே கேட்டை திறக்க இரு திறப்பு விழா திராவிட கட்சிகளின் அட்ராசிட்டி தாங்க முடியல
/
மூடிய ரயில்வே கேட்டை திறக்க இரு திறப்பு விழா திராவிட கட்சிகளின் அட்ராசிட்டி தாங்க முடியல
மூடிய ரயில்வே கேட்டை திறக்க இரு திறப்பு விழா திராவிட கட்சிகளின் அட்ராசிட்டி தாங்க முடியல
மூடிய ரயில்வே கேட்டை திறக்க இரு திறப்பு விழா திராவிட கட்சிகளின் அட்ராசிட்டி தாங்க முடியல
ADDED : ஆக 06, 2024 06:29 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மூடப்பட்ட வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. காலையில் தி.மு.க.,வினர், 'ரிப்பன்' வெட்டியும்; மாலையில், அ.தி.மு.க.,வினர் கொடி அசைத்தும் உரிமை கொண்டாடினர்.
அரசியல் கட்சியினர் மக்களை கவர, விதம், விதமாக பேசி, தாங்கள் தான் மக்களின் காவலன் என்ற பிரம்மையை உருவாக்குவதில், அவர்களுக்கு இணை அவர்களே. சின்ன விழாவாக இருந்தாலும் தோரணங்கள் கட்டி மக்களை அழைத்து லட்டு கொடுத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஓட்டு வங்கியை தக்க வைக்க பல உத்திகளை கையாள்கின்றனர்.
பொள்ளாச்சியில் மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறப்பதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே நேற்று போட்டா போட்டி நடந்தது.
பொள்ளாச்சி, வடுகபாளையம் செல்வகுமார் விஸ்தரிப்பு வீதியில், 100 ஆண்டுகளாக ரயில்வே கேட் இருந்தது. இப்பகுதி மக்கள், இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தனர்.
கோவையில் இருந்து வடுகபாளையம், பாலக்காடு ரோடு செல்வோரும், சி.டி.சி., மேடு வழியாக ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. பள்ளி, கல்லுாரி மணவர்கள், பொதுமக்கள் இவ்வழியாகத்தான் சென்று வந்தனர். இந்த ரயில்வே கேட்டை மூடக்கூடாது என, அ.தி.மு.க.,வினர் சில மாதங்களுக்கு முன் ரயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
ஆனால், கடந்த மாதம், 5ம் தேதி இந்த ரயில்வே கேட் முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டது. இதற்கு மாற்றாக, பி.கே.டி., பள்ளி ரோடு சப்வே வழியாக செல்லலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
தகவல் அறிந்த தி.மு.க.,வினர் மக்களுடன் இணைந்து சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.இதையறிந்த அ.தி.மு.க.,வினர், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மாவட்ட கலெக்டரும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக கட்சியினர் தரப்பில் தெரிவித்தனர்.
இதை கண்ட தி.மு.க.,வினர், எம்.பி., ஈஸ்வரசாமி வாயிலாக, ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தார்.
இந்நிலையில், மாற்றுப்பாதை திட்டம் முழுமையாக முடிவடையாததால் ரயில்வே கேட்டை திறக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மாற்றுப்பாதை முடிவடைந்தால், ரயில்வே அதிகாரிகளின், ரயில்வே கேட் மூடல் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தரப்பில் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இரு கட்சிகளும் தங்களால் தான் ரயில்வே கேட் திறக்கப்படுகிறது என தம்பட்டம் அடிக்க துவங்கினர்.
அதன் உச்சமாக, நேற்று இரு கட்சிகளும் போட்டி போட்டு, மூடப்பட்ட ரயில்வே கேட்டுக்கு திறப்பு விழா நடத்தினர். தி.மு.க., நிர்வாகிகள், ரயில்வே கேட் அருகே பிளக்ஸ் வைத்து, ரயில்வே கேட்டை, 'ரிப்பன்' வெட்டி திறந்தனர்.
அ.தி.மு.க.,வினர் நேற்று மாலை, எம்.எல்.ஏ., தலைமையில் அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவால் தான் இது நடந்தது என, மக்களிடம் தெரிவித்தனர்.
ஆனால், இரு கட்சியினரும் இந்த கேட் எத்தனை நாட்களுக்கு திறந்து இருக்கும் என்ற ரகசியத்தை மட்டும் ரகசியமாக வைத்துள்ளனர்.
இரு கட்சிகள் திறப்பு விழா நடத்தியுள்ள நிலையில், போராட்டம் நடத்தின மற்ற கட்சியெல்லாம் எப்போ, என்ன நிகழ்ச்சி நடத்தப்போறாங்ளோ தெரியவில்லை.
எது எப்படியோ, நமக்கு வழி கிடைச்சாச்சு என்றமனநிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் ரயில்வே கேட்டை கடந்து சென்றனர்.