/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான் போட்டி
/
அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான் போட்டி
ADDED : மார் 28, 2024 05:39 AM
பெ.நா.பாளையம், : கோவை லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான் போட்டி என, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
துடியலூரில் கோவை லோக்சபா தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன் அறிமுக கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில்,தமிழகத்தில் இரண்டாவது பெரிய சட்டசபை தொகுதி கவுண்டம்பாளையம். இங்கு, 435 பூத்துகள் உள்ளன. இங்கு, 4.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கோவை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், அ.தி.மு.க., கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, தி.மு.க.,வில் இணைந்து வேட்பாளராகி விட்டார். அ.தி.மு.க.,வில் இருந்து சென்றவருக்குதான், தி.மு.க.,வில் வேட்பாளர் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கோவையில் போட்டியிட தி.மு.க.,வில் வேட்பாளரே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு, அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்களுக்கு இடையே தான்போட்டி.தி.மு.க., பொய்யான தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது, அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் தி.மு.க., கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு எவ்வித வளர்ச்சி பணியையும் செய்யவில்லை. மாறாக, அ.தி.மு.க., ஆட்சியின் போது போடப்பட்ட ரோடுகளை தோண்டி போட்டு விட்டனர். அது மட்டுமல்ல, தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன், ரோடு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்ய விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்துவிட்டது.
அ.தி.மு.க., ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய ரோடு, பாலம், மருத்துவமனை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, அ.தி.மு.க.,வினர் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், அ.தி.மு.க., கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், கோவனூர் துரைசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,வின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.