/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதலாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் தேவை பட்ஜெட்டில் அனுமதி பெற மாநகராட்சி திட்டம்
/
கூடுதலாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் தேவை பட்ஜெட்டில் அனுமதி பெற மாநகராட்சி திட்டம்
கூடுதலாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் தேவை பட்ஜெட்டில் அனுமதி பெற மாநகராட்சி திட்டம்
கூடுதலாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் தேவை பட்ஜெட்டில் அனுமதி பெற மாநகராட்சி திட்டம்
ADDED : ஜூன் 20, 2024 05:34 AM
கோவை, : கழிவுநீரை சுத்திகரிக்க மேலும், மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, மாநகராட்சி அமைக்க உள்ளது.
கோவை மாநகராட்சியில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளும் கடந்த, 15 ஆண்டுகளாக நடக்கின்றன.
பாதாள சாக்கடைப் பணிகள் நிறைவடையும்போது, அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர், சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக சுத்திகரிக்கப்படும்.
அதன்படி, உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில், 30 மில்லியன் லிட்டர் கழிவுநீர், ஒண்டிப்புதுாரில், 60 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.
நஞ்சுண்டாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 2019ம் ஆண்டு துவங்கியது. தற்போது, 43.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நஞ்சுண்டாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 40 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்க முடியும்.
இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கூடுதலாக மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில், ''பழைய மாநகராட்சி பகுதிகளில், சாக்கடை கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டு, 40 - 50 ஆண்டுகள் ஆகிறது. வீடுகளுக்கென பிரத்யேக பாதாள சாக்கடை வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றில் இருந்து பெறப்படும் துாயநீரை, சிட்கோவில் உள்ள தொழிற்கூடங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, புதிதாக பட்ஜெட்டில் மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது,'' என்றார்.