/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளக்கரையை சுத்தம் செய்து தார் சாலை அமைக்க வேண்டும்
/
குளக்கரையை சுத்தம் செய்து தார் சாலை அமைக்க வேண்டும்
குளக்கரையை சுத்தம் செய்து தார் சாலை அமைக்க வேண்டும்
குளக்கரையை சுத்தம் செய்து தார் சாலை அமைக்க வேண்டும்
ADDED : செப் 05, 2024 12:11 AM

மேட்டுப்பாளையம் : பெள்ளாதி குளத்தின் கரையை, அகலப்படுத்தி தார் சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு, ஏழு எருமை பள்ளத்தின் வழியாகவும், காரமடை, மருதூர், காட்டாஞ்சி மலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், குளத்தின் நீர் ஆதாரமாகும்.
ஒருமுறை குளம் நிறைந்தால், எட்டு மாதங்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கும். அதற்குள் மழை பெய்தால், மீண்டும் குளம் நிறைந்து விடும். அதனால் ஆண்டு முழுவதும் இக்குளத்தில் தண்ணீர் நிறைந்து இருக்கும். தண்ணீர் அதிகம் தேங்கி இருப்பதால், அரசு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில், மீனவர்கள் மீன்களை வளர்த்து பிடித்து வருகின்றனர்.
குளத்தின் கிழக்குப் பகுதி கரை, பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகரிலும், மேற்கு பகுதி கரை காரமடை நகராட்சிக்கு உட்பட குளத்துப்பாளையம் வரை, ஒன்றரை கிலோ மீட்டருக்கு குளத்தின் கரை அமைந்துள்ளது. கரை மீது முள் செடிகளும், மரங்களும் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. கரை மீது வரும் வாகனங்களுக்கு, இந்த செடிகளால் எதிரே வரும் வாகன ஓட்டுனர்களுக்கு, தெரியாத அளவில் புதர் போல் உள்ளன.
இது குறித்து பெள்ளாதி மக்கள் கூறியதாவது: பெள்ளாதி குளத்தில் தண்ணீர் எப்போதும் நிறைந்திருப்பதால், இக்குளத்தில் படகு சவாரி விட வேண்டும். அதற்கு ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரை மீது வளர்ந்துள்ள செடிகள், முள் மரங்களை அகற்றி, கரையை அகலப்படுத்தி, தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் கரைக்கும் கீழே உள்ள மண் சாலையையும், அகலம் செய்து தார் சாலையாக போட வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.
இது குறித்து பெள்ளாதி ஊராட்சித் தலைவர் பூபதி குமரேசன் கூறுகையில், இக்குளத்தில் படகு சவாரி விடுவது குறித்தும், கரையை அகலப்படுத்தி தார் சாலை போட அனுமதி வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்கப்படும், என்றார்.