/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திரும்பி வந்தது 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கை
/
திரும்பி வந்தது 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கை
ADDED : ஆக 25, 2024 04:21 AM

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில், சில மாறுதல்கள் செய்து தரக்கோரி, மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
கோவையில், 'மெட்ரோ ரயில்' இயக்க, நான்கு வழித்தடங்களில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தது.
அப்போது, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என நான்கு வழித்தடங்களில், 144 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ' ரயில் திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
திட்ட அறிக்கை
அதில், முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
உத்தேசமாக, 10 ஆயிரத்து, 740 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. மொத்தம், 39 கி.மீ., துாரத்துக்கு, 32 நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
சமீபத்தில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழு கள ஆய்வு செய்தபோது, 4.2 கி.மீ., துாரம் குறைக்கப்பட்டது. இறுதியாக, சத்தி ரோட்டில் 16 கி.மீ., என்பது, 14.4 கி.மீ., எனவும், அவிநாசி ரோட்டில், 23 கி.மீ., என இருந்ததை, 20.4 கி.மீ., ஆகவும் குறைக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, விரிவான திட்ட அறிக்கையை, தமிழக அரசு அனுப்பியது.
திருப்பி அனுப்பிய மத்திய அரசு
நிதி ஆதாரத்துக்கு மத்திய அரசு 15 சதவீதம், மாநில அரசு 15 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தவும், மீதமுள்ள, 70 சதவீத தொகையை வங்கி கடனுதவி பெற்று செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், கடனுதவி பெறுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.
இச்சூழலில், 'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையில் சில மாறுதல் செய்து அனுப்புமாறு, தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
'மெட்ரோ ரயில்' கொள்கைபடி, எந்த ஒரு நகரத்திலும் மெட்ரோ ரயில் அமைக்க வேண்டுமென்றால், அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விரிவான திட்ட அறிக்கையோடு, திட்டமிடப்படும் வழித்தடத்தை ஒட்டி அமைந்துள்ள, வேறு சில சிறு வழித்தடங்களையும் உள்ளடக்கி, ஒருங்கிணைந்த இயக்க திட்டமான சி.எம்.பி.,யும் (காம்ப்ரஹென்சிவ் மொபிலிட்டி பிளான்) அளிக்க வேண்டும்.
அந்த குறிப்பிட்ட வழித்தடம், பொருத்தமாக இல்லை என்றாலோ அல்லது பல்வேறு காரணங்களால் கைவிடப்படும் சூழ்நிலை உருவானாலோ, வேறொரு புதிய வழித்தடத்துக்கு ஆய்வறிக்கை அளிக்க வேண்டும்.
'மெட்ரோ ரயில்' திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையோடு சேர்த்து, இவ்விரண்டு அறிக்கைகளை, 'மெட்ரோ ரயில்' கொாள்கைப்படி, மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், விரிவான திட்ட அறிக்கை மட்டும் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அதன் காரணமாக, திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரித்தபோது, 'கோவைக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையுடன் இணைக்க வேண்டிய சில ஆவணங்கள் இல்லாததால், திருப்பி அனுப்பப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அவற்றை சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் செய்து, விடுபட்ட ஆவணங்களை இணைத்து அனுப்புவர்' என்றனர்.