/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் ஓட்டுகள் வந்தாச்சு! ஜூன் 4க்கு காத்திருப்பு
/
தபால் ஓட்டுகள் வந்தாச்சு! ஜூன் 4க்கு காத்திருப்பு
ADDED : மே 03, 2024 12:29 AM

கோவை:கோவை லோக்சபா தொகுதிக்கு, மற்ற மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள், திருச்சியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இம்முறை லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள், அதிகாரிகள், போலீசார் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் மற்றும், 85 வயதுக்கு மேற்பட்டோர் தபால் ஓட்டு செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது.
முந்தைய தேர்தல் வரை, ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு வரை, அரசு அலுவலர்களில் தபாலில் ஓட்டுகளை அனுப்ப வசதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களுக்கு அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுப்பதாக, தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்ததால், இம்முறை தபால் ஓட்டுகளை தபாலில் அனுப்ப முடியாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதற்கு பதிலாக, தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தியபோது, சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., அந்தஸ்திலான அதிகாரி, பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கோவை லோக்சபா தொகுதியை சேர்ந்த அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், போலீசார் பணி நிமித்தமாக வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். அவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகளை, சம்பந்தப்பட்ட தொகுதி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க, திருச்சியில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல், கோவை மாவட்டத்தில் பதிவான மற்ற தொகுதிகளை சேர்ந்த அலுவலர்களின் தபால் ஓட்டுகளை, அதிகாரிகள் திருச்சிக்கு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட தொகுதியை சேர்ந்தவர்களிடம் வழங்கினர்.
மற்ற மாவட்டங்களில் கோவைக்கு பதிவான ஓட்டுகள் பெறப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு முன், 16 மற்றும், 17 ஆகிய இரு நாட்கள் மீண்டும் தபால் ஓட்டு செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. விடுபட்ட அலுவலர்கள், அவ்விரு நாட்களில் தபால் ஓட்டு செலுத்தினர்.
இவற்றை பெறுவதற்காக, கோவையில் இருந்து டி.ஆர்.ஓ., அபிராமி தலைமையிலான குழுவினர், திருச்சி சென்று, கோவை தொகுதிக்கு பதிவாகியிருந்த, 136 தபால் ஓட்டுகளை பெற்றனர். இதற்கு முன், 7,103 தபால் ஓட்டுகள் பெறப்பட்டிருந்தன. இதுவரை, 7,239 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.
'சர்வீஸ் ஓட்டு' என்றழைக்கப்படும் ராணுவ வீரர்கள் செலுத்தும் தபால் ஓட்டு, ஜூன் 4ல் எண்ணுவதற்கு முன்பு வரை பெறப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.