/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கண் மண் தெரியாமல்' அள்ளுறாங்க மண்! நள்ளிரவு கடத்தல் குறித்து விவசாயிகள் புகார்
/
'கண் மண் தெரியாமல்' அள்ளுறாங்க மண்! நள்ளிரவு கடத்தல் குறித்து விவசாயிகள் புகார்
'கண் மண் தெரியாமல்' அள்ளுறாங்க மண்! நள்ளிரவு கடத்தல் குறித்து விவசாயிகள் புகார்
'கண் மண் தெரியாமல்' அள்ளுறாங்க மண்! நள்ளிரவு கடத்தல் குறித்து விவசாயிகள் புகார்
ADDED : ஆக 10, 2024 10:29 PM

அன்னூர்:கோவை அருகே விதிமுறையை மீறி, நள்ளிரவில் மண் எடுத்து, கடத்தி விற்பனை செய்யப்படுவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில், வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளித்து, கோவை கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவு பிறப்பித்தார். கோவை மாவட்டத்தில் 62 குளம், குட்டைகளில், வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
நன்செய் நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 75 கனமீட்டர் அளவுக்கும், புன்செய் நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 90 கன மீட்டரும் மண் எடுக்கலாம்.
மண் எடுக்கும் போது, உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரிகள், முன்னிலையில் மண் எடுக்க வேண்டும். அதிகாரிகள் மண் எடுப்பதை கண்காணிக்க வேண்டும்.
ஒரு விவசாயிக்கு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே, மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.
அன்னூர் தாலுகாவில், காரே கவுண்டன் பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், குப்பேபாளையம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளில், 28 குளம் குட்டைகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் விதிமுறை மீறி, இரவிலும் பல லோடு மண் அள்ளுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கெம்பநாயக்கன் பாளையம் விவசாயிகள் கூறியதாவது:
கடந்த மூன்று நாட்களாக, கெம்பநாயக்கன்பாளையம் குளத்தில் இருந்து, இரவு நேரத்தில் பல லோடு மண் எடுக்கின்றனர். வண்டல் மண் மட்டும் எடுக்க கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் கிராவல் மண்ணும் சேர்ந்து எடுக்கின்றனர். குளத்தில் மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
மண் எடுப்பதை அதிகாரி கண்காணிப்பது இல்லை. இதனால் குளத்தின் தன்மை மாசுபடும். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்.
விதிமுறைப்படி மண் எடுப்பதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மண் கடத்தி விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அன்னூர் தாசில்தார் குமரி ஆனந்தனை தொடர்பு கொண்டபோது, தான் மீட்டிங்கில் இருப்பதாகவும், பின்னர் பேசுவதாகவும் தெரிவித்தார்.