/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணை கொலை செய்தவர் 24 மணி நேரத்தில் சிக்கினார்
/
பெண்ணை கொலை செய்தவர் 24 மணி நேரத்தில் சிக்கினார்
ADDED : மே 07, 2024 10:25 PM

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன் பாளையத்தில் பட்டப் பகலில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம் பாலாஜி நகரில் வசித்தவர் ரேணுகா, 40. கடந்த ஞாயிறன்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ரேணுகாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினார்.
கொலை நடந்த வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஒரு வாலிபர் ரேணுகா வீட்டு காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்து உள்ளே செல்வதும், சற்று நேரத்தில் திரும்பி வருவதும் தெரிந்தது. ஆறு தனிப் படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
ரேணுகா வீட்டருகே வசிக்கும் சதீஷ், 34, என்பவர்தான் இந்தக் கொலையை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
சதீஷ், தன் காரை அடமானம் வைத்து மீட்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். மேலும், கடன் தொல்லையும் அதிகமாக இருந்ததால், ரேணுகா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.
ரேணுகாவின் அணிந்திருந்த, 3 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது நடந்த போராட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், தன்னிடம் இருந்த அரிவாளால் ரேணுகாவின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட ஏழு இடங்களில் சரமாரியாக வெட்டினார். ரேணுகா அதே இடத்தில் உயிரிழந்தார். பின், சுவரை தாண்டி பின்பக்கம் வழியாக தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்பகுதியில் கூடிய கூட்டத்தில் சதீஷ் ஒன்றும் தெரியாதவர் போல நின்று மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். போலீசார் சதீஷை கைது செய்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்த தனிப்படையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

