/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருசம் மூனாச்சு; மக்கள் பிரதிநிதிகள் எங்க இருக்காங்க! அடிப்படை வசதி இல்லாத அண்ணா நகர்
/
வருசம் மூனாச்சு; மக்கள் பிரதிநிதிகள் எங்க இருக்காங்க! அடிப்படை வசதி இல்லாத அண்ணா நகர்
வருசம் மூனாச்சு; மக்கள் பிரதிநிதிகள் எங்க இருக்காங்க! அடிப்படை வசதி இல்லாத அண்ணா நகர்
வருசம் மூனாச்சு; மக்கள் பிரதிநிதிகள் எங்க இருக்காங்க! அடிப்படை வசதி இல்லாத அண்ணா நகர்
ADDED : செப் 13, 2024 10:33 PM

வால்பாறை : வால்பாறை, அண்ணா நகர் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை காமராஜ்நகர், கக்கன்காலனி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியில், நகராட்சி சார்பில் எவ்வித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை. இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.
குறிப்பாக, அண்ணாநகர் பகுதியில் நடைபாதை, தடுப்புச்சுவர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்படவில்லை.
குடியிருப்புகளுக்கு இடையே அமைந்துள்ள சாக்கடை கால்வாய் துார்வாரி சுத்தம் செய்யப்படாததால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதோடு, சுகாதார சீர்கேட்டினால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அண்ணாநகரில் பல்வேறு இடங்களில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதை, தடுப்புச்சுவர் இடிந்த நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதி அருகில், புதர்கள் அகற்றப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் சிறுத்தை பதுங்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
மாரியம்மன் கோவில், ராமர்கோவில் செல்லும் நடைபாதை நகராட்சியால் சீரமைக்கப்படவில்லை. குடியிருப்பு மேல்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மக்களுக்குதேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், நகராட்சி சார்பில் படிப்படியாக செய்துதரப்படும். முதல்வரின் உத்தரவுபடி, மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, நடைபாதை, ரோடு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட பணிகள் விரைவில் செய்யப்படும். மழை சீசன் முடிந்ததும் பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.
குடிநீர் சுகாதாரமில்லை!
தனியார் நிறுவன ஊழியர் ஆனந்த் கூறுகையில், ''சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து பல ஆண்டுகளாகிறது. கொசு மருந்து கூட இப்பகுதியில் அடிப்பதில்லை. ராமர் கோவில் செல்லும் ரோடு, உருக்குலைந்த நிலையில் உள்ளது. சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் உள்ளதால், குடிநீர் சுகாதாரமின்றி வினியோகிக்கப்படுகிறது. பல இடங்களில் இடிந்த நிலையில் உள்ள தடுப்புச்சுவர்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்,'' என்றார்.
கொசுத்தொல்லை
தே.மு.தி.க., நகர பொறுப்பாளர் பாலாஜி ரவீந்தரன் கூறுகையில், ''அண்ணாநகரின் ஒரு பகுதியில் குப்பை அகற்ற, துாய்மை பணியாளர்கள் யாரும் வருவதில்லை. நகரில் வெளியாகும் சாக்கடை கழிவுநீர் முழுவதும் திறந்தவெளியில் தேங்குகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் நடைபாதை இடிந்த நிலையில் உள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து நகராட்சி அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும்,'' என்றார்.