/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : மார் 07, 2025 07:18 AM

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள, வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழா நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தியுடன் துவங்கியது.
நேற்று காலை கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கொடியேற்றம் விழா துவங்கியது. காலை, 10:00 மணிக்கு கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு கொடி மரத்தின் கீழே, யாக வேள்வி பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து, 11:00 மணிக்கு, 40 அடி உயரமுள்ள கொடி மரத்தில், கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷம் போட்டனர். நூற்றுக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தனர். அப்போது கோவிலின் மேலே வானத்தில் பருந்து ஒன்று, வட்டமிட்டு கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் கைகூப்பி வணங்கினர்.
ஏழாம் தேதி சிம்ம வாகனத்திலும், எட்டாம் தேதி அனுமந்த வாகனத்திலும், ஒன்பதாம் தேதி கருட வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. பத்தாம் தேதி பெட்டத்தம்மன் மலையில் இருந்து அம்மன் அழைப்பும், 11ம் தேதி காலை 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 12-ம் தேதி அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருள உள்ளார். அன்று மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது.
13ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 14ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) பேபி ஷாலினி, அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.