/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தகிக்கும் வெயிலால் தக்காளி பாதிப்பு! தரமும் இல்லாததால் தவிப்பு
/
தகிக்கும் வெயிலால் தக்காளி பாதிப்பு! தரமும் இல்லாததால் தவிப்பு
தகிக்கும் வெயிலால் தக்காளி பாதிப்பு! தரமும் இல்லாததால் தவிப்பு
தகிக்கும் வெயிலால் தக்காளி பாதிப்பு! தரமும் இல்லாததால் தவிப்பு
ADDED : மே 09, 2024 04:58 AM

உடுமலை : வெயிலின் தாக்கத்தால், தக்காளி செடி மற்றும் பழங்களில், பாதிப்பு ஏற்பட்டு, சந்தைக்கும் வரத்து குறைந்து வருவதுடன், சீரான உற்பத்திக்கும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
உடுமலை வட்டாரத்தில், கிணற்று பாசனத்துக்கு, ஆண்டு முழுவதும் பல சீசன்களில், தக்காளி பிரதானமாக சாகுபடியாகிறது. வழக்கமாக, மழைக்காலங்களில், செடிகளில் பூ உதிர்தல், பிஞ்சு அழுகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, தக்காளி உற்பத்தி பாதியாக குறைந்து விடும்.
ஆனால், வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு துவங்கும் சீசனில், தக்காளி உற்பத்தி பல மடங்கு அதிகரித்து, விலை சரியும்.
ஆனால், நடப்பாண்டு, மழை இல்லாமல், கோடை வெயில் கொளுத்தி வருவதால், நிலைமை தலைகீழாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையும், கோடை கால மழையும் பெய்யாததால், நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, தக்காளி சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணறு மற்றும் போர்வெல்களில் இல்லை. எனவே, சாகுபடி பரப்பு பல மடங்கு குறைந்து விட்டது.
நீர் வளம் குறைவான பகுதிகளில், சொட்டு நீர் பாசனம் வாயிலாக நடவு செய்த தக்காளி நாற்றுகளும், அதிக வெப்பத்தால், வளர்ச்சி தருணத்தில் பாதிக்கப்பட்டன.
இயல்பான வளர்ச்சி இல்லாமல், பூ விட துவங்கியதால், உற்பத்தி பாதியாக குறைந்து விட்டது. காய்களும், வெயிலின் தாக்கத்தால், தரமில்லாமல் விளைந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: இந்த சீசனில் தக்காளி சாகுபடியில், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். அதிக வெயில் காரணமாக செடிகளின் வளர்ச்சியும், மகசூலும் குறைந்து விட்டது.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே, தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இருப்பினும், தக்காளி பழங்களை இருப்பு வைக்க முடியாத அளவுக்கு, தோல் பகுதி பாதிக்கிறது.
தற்போது தரத்தின் அடிப்படையில், வியாபாரிகள் நேரடியாக வந்து, 14 கிலோ கொண்ட பெட்டியை, 100 - 250 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். கோடை மழை பெய்யாவிட்டால், சாகுபடி முற்றிலுமாக பாதிக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.