/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
/
பழைய வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 12, 2025 11:24 PM

மேட்டுப்பாளையம்; பொதுமக்கள் வந்து செல்லும் வீதியிலும், சிறுமுகை மெயின் சாலையிலும்,விபத்துக்கு உள்ளான பழைய கார்களை நிறுத்துவதால்,போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேட்டுப்பாளையம் நகரம், பழைய வாகனங்கள் விற்பனைக்கும், அதன் உதிரி பாகங்கள் விற்பனைக்கு பெயர் பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இத்தொழில் செய்து வருகின்றனர்.
விபத்துக்கு உள்ளான கார்கள், வேன்களை இவர்கள் வாங்கி வந்து, மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் சாலையில் உள்ள எக்ஸ்டென்ஷன் வீதிகளில் உடைத்து வந்தனர். இங்கு குடியிருப்புகள் அதிகம் இருந்ததால், பழைய வாகனங்கள் நிறுத்தி உடைப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் இவர்கள் சங்கர் நகர் அருகே இடம் வாங்கி, அங்கு அனைத்து கடைகளையும் அமைத்தனர். நகராட்சியின் சார்பில் அங்குள்ள சாலைகளுக்கு தார் போடப்பட்டது. இதில், எல்.ஐ.சி., அலுவலகம் அருகே உள்ள தார் சாலையின் இரு பக்கம் விபத்துக்கு உள்ளான பழைய கார்களை நிறுத்தியும், வாகனங்களை உடைத்தும் வருகின்றனர். இந்த சாலை வழியாக பொது மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதேபோன்று சிறுமுகை சாலையின் இரு பக்கம் விபத்துக்கு உள்ளான கார்களையும், விற்பனைக்கு பழைய கார்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இச்சாலை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த வழியாக போலீஸ் அதிகாரிகளும், தாசில்தாரரும், நகராட்சி அதிகாரிகளும் தினமும் சென்று வருகின்றனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சாலையில் நிறுத்தி வைத்துள்ள கார்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.