ADDED : ஜூலை 01, 2026 11:42 PM
சூலூர்: சூலூர் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பது தொடர்பான பயிற்சி, பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும், 8 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. இதற்காக, தாலுகா அளவில் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூலூர் தாலுகாவில், 480 க்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி, சூலூர் ஆர்.வி.எஸ்., கல்லூரியிலும், கருமத்தம்பட்டி நகராட்சியிலும், பேரூராட்சி அலுவலகங்களிலும் நடந்தது.
சூலூர் தாசில்தார் செந்தில்குமார் பயிற்சியில் பேசுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் ஒவ்வெருவரும் ஈடுபட வேண்டும். துல்லியமான கணக்கெடுப்பு நடத்தினால் தான், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செம்மையாக செயல்படுத்த முடியும், என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது, என்றார்.
ஆக., 1 முதல், 30 ம்தேதி வரை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், முதல் கட்டமாக ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வீடுகளை கணக்கெடுக்க வேண்டும். அதன் பின், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை விபரங்களை கேட்டு பெறவேண்டும், என, பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
