/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிட்டிக்குள் வந்ததால் சிக்கல் இரண்டு ரவுடிகளுக்கு சிறை
/
சிட்டிக்குள் வந்ததால் சிக்கல் இரண்டு ரவுடிகளுக்கு சிறை
சிட்டிக்குள் வந்ததால் சிக்கல் இரண்டு ரவுடிகளுக்கு சிறை
சிட்டிக்குள் வந்ததால் சிக்கல் இரண்டு ரவுடிகளுக்கு சிறை
ADDED : பிப் 27, 2025 12:45 AM

கோவை: மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவை மீறி, கோவை மாநகர பகுதிக்குள் வந்த இரண்டு ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாநகர பகுதிகளில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில், சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் கீழ் தற்போது வரை, 110 ரவுடிகளை மாநகரில் இருந்து வெளியேற கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். உத்தரவை மீறி மாநகர பகுதிக்குள் சுற்றித்திரியும் ரவுடிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கின்றனர்.
இந்நிலையில், சித்தி விநாயகர் காலனியை சேர்ந்த அருண் ஹாசன், 42 கமிஷனர் உத்தரவை மீறி அவ்வப்போது மாநகருக்குள் வந்து செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர் கட்ட பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கிடைத்தது. போலீசார் அவரை காண்காணித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கல்வீரம்பாளையத்தை சேர்ந்த மஞ்சுநாதன், 38 மாநகருக்குள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர் உத்தரவை மீறி, மாநகருக்குள் வந்துள்ளார்.
மது போதையில் தனது அண்ணன் மனைவியிடம், தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். அவர் வடவள்ளி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் மஞ்சுநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.