/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன பத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுர பணிகள் துவங்கியது
/
வன பத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுர பணிகள் துவங்கியது
வன பத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுர பணிகள் துவங்கியது
வன பத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுர பணிகள் துவங்கியது
ADDED : செப் 03, 2024 01:51 AM

மேட்டுப்பாளையம்;வனபத்ரகாளியம்மன் கோவில், ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள், மீண்டும் துவங்கியது.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். பக்தர்களின் வேண்டுகோளை அடுத்து, ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கின. பல்வேறு காரணங்களால், இரண்டு ஆண்டுகளாக பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தன. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, ராஜகோபுர கட்டுமானப் பணிகளை மீண்டும் துவக்கி வைத்தார்.
இதை அடுத்து கல்காரப் பணிகள் அனைத்தும், ஜூலை மாதம் நிறைவடைந்தன. செங்கல் கற்களால் கோபுரம் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு தேவையான செங்கற்கள் வாங்கப்பட்டன. இந்நிலையில் கோவிலின் ஆடிக் குண்டம் திருவிழா நடந்ததை அடுத்து, பணிகள் நடைபெறாமல் நின்றது. திருவிழா முடிந்த பின், மண்டல ஸ்தபதியார் ராமகிருஷ்ணன் முன்னிலையில், அளவீடுகள் செய்து ராஜகோபுரம் கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கின.
இது குறித்து வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறுகையில், தற்போது கோபுரத்தின் செங்கல் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. ஒராண்டில் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார். ராஜகோபுரம் திருப்பணிகளை இணை கமிஷனர் ரமேஷ், செயற்பொறியாளர் ரேவதி, கோவில் தக்கார் மேனகா ஆகியோர் பார்வையிட்டனர்.