/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கதேசத்தினர் கோவை, திருப்பூரில் ஊடுருவல்
/
வங்கதேசத்தினர் கோவை, திருப்பூரில் ஊடுருவல்
ADDED : செப் 10, 2024 04:18 AM

சூலுார்: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், விநாயகர் சதுர்த்தி, விசர்ஜன விழா பொதுக்கூட்டம் சூலுாரில் நேற்று நடந்தது.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்கி பேசுகையில், விநாயகர் சதுர்த்தி இந்து மக்களிடையே எழுச்சி உருவாக்கும் விழாவாக உள்ளது. உலகம் முழுக்க சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இந்துக்களின் எழுச்சியால், சிவன், ராமர் கோவில்கள் மீட்கப்பட்டு புனரமைக்கப்பட்டன. அதேபோல், மதுராவில் கிருஷ்ணர் கோவிலும் மீட்கப்படவேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும், என்றார்.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜிபேசியதாவது:
இன்று எந்த இடத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினாலும், அரசியல்வாதிகள், அதிகாரிகளை வைத்து, பிரச்னைகள் மற்றும் தடை ஏற்படுத்துகிறார்கள். மற்ற எந்த மத நிகழ்ச்சிக்கும் இத்தனை தடைகள் கிடையாது. ஏனென்றால் அவர்களிடம் ஓட்டு இருக்கிறது. இந்துக்கள் ஜாதி, மொழி, மதம், அரசியல், மாநிலம் என, பிளவுபட்டுள்ளனர்.
இப்படி உள்ள இந்துக்கள், நாத்திகன் என்ற பெயரில் இந்து கடவுள்களை திட்டுகின்றனர். 'இண்டி' கூட்டணி என்ற கூட்டணியில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூ., உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. அவர்கள் இந்து விரோத, எதிர்ப்பு சிந்தனை உள்ளவர்கள். பாரத நாட்டுக்கு எதிராக உள்ளவர்கள்.
வங்க தேசத்தில் இருந்து தமிழகத்துக்குள் ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர். தொழில் நகரங்களான கோவை, திருப்பூரில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளதால், தீவிரவாதிகள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டு, இங்கு வந்து கொண்டுள்ளனர். சிறிய கிராமங்களில் கூட அவர்கள் ஊடுருவி உள்ளனர். ஆனால், இந்துக்கள் உறங்கி கொண்டுள்ளோம்.
நம் மதத்தை பின்பற்ற, வழிபாடுகள் நடத்த நமக்கு அனைத்து உரிமைகளையும் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேலும் அதிகமான இளைஞர்கள் வரவேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், மாநில இணைபொதுச்செயலாளர் விஜயகுமார், மாநகர் மாவட்டஇணை செயலாளர் கணேஷ்,பா.ஜ., மாவட்ட செயலாளர் சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

