/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று விநாயகர் விசர்ஜன ஊர்வலம்
/
இன்று விநாயகர் விசர்ஜன ஊர்வலம்
ADDED : செப் 09, 2024 08:14 AM

மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் இன்று நடப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அன்னுார் தாலுகாவில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் இன்று நடக்கிறது.
அன்னுார் வட்டாரத்தில், ஹிந்து முன்னணி சார்பில், அன்னுார், கரியா கவுண்டனுார், மூக்கனுார், கணேசபுரம் உள்ளிட்ட 45 இடங்களில், நேற்றுமுன்தினம் அதிகாலை விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமம் நடந்தது. நேற்று கோமாதா பூஜை நடந்தது.
விழாவை ஹிந்து முன்னணி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில், மூன்று இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விழா நடந்தது.
பொதுமக்கள் சார்பில் 49 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 45 விநாயகர் சிலைகள் இன்று மாலை 4:00 மணிக்கு, ஓதிமலை ரோட்டில் உள்ள பாத விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்படுகின்றன. முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் விநாயகர் கோவிலை அடைகிறது. அங்கிருந்து சிறுமுகை அருகே பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், கோட்டை பாளையம், அத்திப்பாளையம், கோவில்பாளையம் உள்ளிட்ட 24 இடங்களில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
இன்று மாலை ஊர்வலம் நடத்தப்பட்டு வெள்ளக்கிணறு குளத்தில் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி அன்று இச்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மேலும் இன்று சிலைகள் ஊர்வலமாக சென்று கரைக்கப்பட உள்ளன. முன்னதாக, அபிராமி தியேட்டர் அருகே இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டமும், தொடர்ந்து சிடிசி டிப்போ அருகில் இருந்து ஊர்வலமாக மேட்டுப்பாளையம் சாலையில் சென்று பின் சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், '' மூன்று டி.எஸ்.பி.,க்கள், பத்துக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 25க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,க்கள், சிறப்பு இலக்கு படை, ஆயுதப்படை, பேரிடர் மீட்பு குழு, கமாண்டோ குழுவினர், வெடிகுண்டு கண்டறிதல் மட்டும் அச்சுறுத்தல் குழுவினர், போலீசார் என மொத்தமாக மேட்டுப்பாளையத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன் தினம் முதல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், கரைக்கும் இடங்கள், ஊர்வல பாதைகளில், தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பாலப்பட்டி பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது, என்றனர்.
--சூலுார் சுல்தான்பேட்டை, கருமத்தம்பட்டி பகுதிகளில், இந்து முன்னணி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, வீர இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 200 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று முன் தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்துக்களின் ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்று மாலை, பொதுக்கூட்டங்கள் மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது.
இந்து முன்னணி சார்பில் சூலூர் பெருமாள் கோவில் திடலில், 4:00 மணிக்கு, பொதுக்கூட்டம், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடக்கிறது. மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் எழுச்சி உரையாற்ற உள்ளார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பசும்பொன் தேசிய கழக மாவட்ட செயலாளர் முருகேஷ், பா.ஜ., தலைவர்கள் பழனிசாமி, ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், அண்ணா கலையரங்கில், 3:00 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி எழுச்சி உரையாற்றுகிறார். மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார், உதயகுமார், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு ஹிந்து அமைப்புகளின் சார்பில், 152 சிலைகள் வெள்ளக்கிணறு குளத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளக்கிணறு, எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கவுண்டம்பாளையம் துடியலுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வருகின்றனர். குளத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொண்டு வரப்படும் சிலைகளை பாதுகாப்பாக வாங்கி குளத்துக்குள் கரைக்க நீச்சல் தெரிந்த நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- நமது நிருபர் குழு -

