/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலைக்கு ஜப்பான் குழு வருகை
/
பாரதியார் பல்கலைக்கு ஜப்பான் குழு வருகை
ADDED : ஆக 25, 2024 10:45 PM
கோவை:கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மேம்பாடுகள், ஒப்பந்தங்கள் மேற்கொள்வது குறித்து, கோவை வந்த ஜப்பான் குழுவினர், பாரதியார் பல்கலை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
பாரதியார் பல்கலை சார்பில், பல்வேறு வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக மாணவர்களின் வேலைவாய்ப்பு, உயர்கல்வி ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டு பல்கலைகள், அங்குள்ள தொழில் துறையின் தேவைகள் ஆகியவற்றுக்கு, பாரதியார் பல்கலை மாணவர்களை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஜப்பான் நாட்டில் இருந்து தொழில் மற்றும் கல்வித்துறையில் அனுபவம் மிக்க, 60 பேர் கொண்ட குழுவினர், நேற்று பல்கலையின் பாரதியார் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பள்ளிக்கு வந்தனர்.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள் குழுவினருடன் வந்திருந்தனர். ஜப்பான் குழுவினர், மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாடினர். குழுவினர் மீண்டும் வரும் செப்., மாதம் வருவதாக தெரிவித்தனர்.
பல்கலை பாரதியார் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பள்ளி இயக்குனர்(பொறுப்பு) ரூபா பேசுகையில், ''ஜப்பான் ஒசாகா பல்கலை, சென்னை, தென்னிந்திய தொழில் வர்த்தக சபை வாயிலாக கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.