/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பெயர் நீக்கம் புகார் :கோவை கலெக்டர் விளக்கம்
/
வாக்காளர் பெயர் நீக்கம் புகார் :கோவை கலெக்டர் விளக்கம்
வாக்காளர் பெயர் நீக்கம் புகார் :கோவை கலெக்டர் விளக்கம்
வாக்காளர் பெயர் நீக்கம் புகார் :கோவை கலெக்டர் விளக்கம்
ADDED : ஏப் 21, 2024 01:25 AM
கோவை:வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, கோவை கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில் கடந்த ஜன., 22 ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 30.81 லட்சம் வாக்காளர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை, அக்டோபரில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பிறகு நடைபெறும் சுருக்க முறை திருத்தத்திற்கு பின்பு, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலராக இருக்கும் கலெக்டரால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது, இளம் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும். இப்பணியில் வெளிப்படை தன்மை உறுதி செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இப்பணியில் அனைத்து நிலைகளில் வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழிவகை உள்ளது.
பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள தேர்தல் ஆணையத்தால் பொதுமக்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தேசிய வாக்காளர் சேவை தளம் வாயிலாக, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி உரிய நடைமுறைகளை பின்பற்றியே, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர்களுக்கு ஏதேனும் கூடுதல் விபரம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வாக்குசாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

