/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன விலங்குகள் வராம பார்த்துக்கோங்க; இழப்பீடு வேண்டாம்! வனத்துறை அதிகாரிகளிடம் மன்றாடிய விவசாயிகள்
/
வன விலங்குகள் வராம பார்த்துக்கோங்க; இழப்பீடு வேண்டாம்! வனத்துறை அதிகாரிகளிடம் மன்றாடிய விவசாயிகள்
வன விலங்குகள் வராம பார்த்துக்கோங்க; இழப்பீடு வேண்டாம்! வனத்துறை அதிகாரிகளிடம் மன்றாடிய விவசாயிகள்
வன விலங்குகள் வராம பார்த்துக்கோங்க; இழப்பீடு வேண்டாம்! வனத்துறை அதிகாரிகளிடம் மன்றாடிய விவசாயிகள்
ADDED : ஆக 20, 2024 10:28 PM

கோவை;கோவை வனக்கோட்ட அளவில் வனத்துறை சார்பில், விவசாயிகளிடம் குறைகேட்கும் கூட்டம், வனக்கல்லுாரி அரங்கில் நேற்று நடத்தப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், விவசாயிகள் பேசியதாவது:
மகாலட்சுமி, விவசாயி: வனத்தை விட்டு விலங்குகள் வெளியே வர ஆரம்பித்து விட்டன. இதற்கு முன் வனத்துக்குள் விலங்குகளுக்கு தேவையான பயிர் ரகங்கள், பழங்கள் இருந்தன. வனங்கள் அழிந்து வருகின்றன. விலங்குகளுக்கு தேவையான பழப்பயிர்கள் உற்பத்தி செய்யலாம். வனத்தை விட்டு வெளியே வராத அளவுக்கு, தடுப்புச்சுவர் ஏற்படுத்த வேண்டும் அல்லது 'பென்சிங்' போட வேண்டும். சமீபகாலமாக உயிர் சேதம் அதிகமாகி வருகிறது.
ராமசாமி, நரசீபுரம்: தோட்டத்தில் வசிக்கிறோம். வாழை பயிரிட்டோம்; யானைகள் சேதப்படுத்தி விட்டன. வனத்துறையினரை கேட்டால் இழுத்துக் கொண்டே இருக்கின்றனர். இழப்பீடு எழுதிக் கொடுத்தோம்; நல்ல பதில் தரவில்லை. எங்களுக்கு இழப்பீடே வேண்டாம்; யானை வராமல் இருந்தால் போதும்.
பழனிசாமி, மாநில தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: வன விலங்குகளால் விவசாயிகளுக்கு உயிர் சேதம் ஏற்படுகிறது; விளைநிலங்கள் பாதிக்கின்றன. அமைச்சர், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்றால், விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் அவர்களுக்கு தெரியவரும். வனத்துறை அதிகாரிகள் மட்டும் குறைகளை கேட்டால், சடங்கு மாதிரி இருக்குமே தவிர, ஆக்கப்பூர்வமாக இருக்காது. பயிர் இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும்.
கந்தசாமி, மாநில பொது செயலாளர், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்: வனம் வளமாக இருக்க விலங்குகள் இருக்க வேண்டும். அவை வனத்தை விட்டு வெளியே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்தை போட்டு எங்கள் கையை கட்டி வைத்திருக்கிறீர்கள். வனச்சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
அரசாணைக்கு காத்திருப்பு
மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பதிலளித்ததாவது:
அனைத்து தரப்பு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இழப்பீடு வழங்கப்படும். அனைத்து விதமான விலங்குகள், பறவைகளால் சேதமானாலும் இழப்பீடு கிடைக்கும்.
சிறு சிறு விவசாயிகளை இணைத்து கூட்டுறவு சங்கமாக உருவாக்கி, பயிர் காப்பீடு செய்ய முடியுமா என ஆலோசித்து வருகிறோம். இயற்கை நன்றாக இருந்தால் தான், எல்லோரும் நன்றாக இருக்க முடியும்.
மூன்று மாநிலங்கள் சேர்ந்து தற்போது வன விலங்கு சர்வே எடுக்கப்பட்டது. காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வது மற்றும் இழப்பீடு தொகை அதிகரிப்பது தொடர்பாக கமிட்டி அமைத்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணைக்கு காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.