/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்காணித்து வருகிறோம்; கமிஷனர்
/
கண்காணித்து வருகிறோம்; கமிஷனர்
ADDED : ஆக 30, 2024 10:14 PM
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், தங்க நகை பட்டறைகள் இருக்கின்றன. இவற்றில், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக ஊடுருவி, கோவையிலேயே தங்கி பணியாற்றி வருவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.
போலி முகவரி கொடுத்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று, குடும்பம் சகிதமாக வசிக்கின்றனர். இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் யார்; வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில், போலீசார் இடையே குழப்பம் காணப்படுகிறது. இதுதொடர்பாக, மத்திய - மாநில உளவுப்பிரிவினர் பல ஆண்டுகளாக விசாரித்து வருகின்றனர். இதுவரை எவ்வித உறுதிப்படுத்துதலும் இல்லை. அவர்களை புரோக்கர்கள் மூலமாக தொழிற்சாலைகள் நடத்துவோர் நியமிப்பதால், அவர்களின் ஆவணங்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை.
இச்சூழலில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சமீபகாலமாக கோவையில் ஊடுருவி வருவதாக, அசாம் மாநில முதல்வர் கூறியுள்ள கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ''அப்படியொரு தகவல் வந்திருக்கிறது. வங்கதேசத்தினர் வருகிறார்களா என்பதை ஏற்கனவே கண்காணித்து வருகிறோம். இப்ப மட்டுமல்ல; முதலில் இருந்தே காவல்துறை சார்பில் கண்காணிக்கிறோம். கோவை நகரப்பகுதிக்குள் இருப்பதாக இதுவரை தகவல் இல்லை,'' என்றார்.
//
'அறிவுறுத்தல் வரணும்'
கோவை கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டதற்கு, ''மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்படி, ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் வெளிமாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்திருப்பவர்கள் விபரங்கள் கடந்தாண்டு சேகரிக்கப்பட்டு, அனுப்பப்பட்டது. அரசிடம் இருந்து தற்போது ஏதேனும் அறிவுறுத்தல் வந்தால், அதன் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
//
'இதுவரை கண்ணில் படவில்லை'
இதுதொடர்பாக, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட்ராமிடம் கேட்டதற்கு, ''சட்ட விரோதமாக இடப்பெயர்ச்சி அடைந்து வந்தவர்கள் யாரும் இதுவரை கண்ணில் படவில்லை. சட்ட விரோதமாக இடப்பெயர்ச்சி அடைவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையை சேர்ந்தது. எனக்கு தெரிந்தவரை இங்கு வசிப்பவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருக்கின்றனர். வங்கதேச பிரச்னைக்கு பின், எனக்கு தெரிந்தவரை, தங்க நகை பட்டறை துறைக்கு யாரும் வரவில்லை. இத்துறையில் அவ்வளவு எளிதாக யாருக்கும் வேலை கிடைக்காது. அவர்கள் தொழில் பழகி இருக்க வேண்டும். ஓட்டலில் சர்வர், கிளீனர் வேலை, வாட்ச்மேன் உள்ளிட்ட வேறு வேலை கிடைக்கும். தங்க நகை தொழிலில் அவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை,'' என்றார்.