/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தானியங்களுக்கு நிலையான விலை தேவை! நேரடி கொள்முதலுக்கு எதிர்பார்ப்பு
/
தானியங்களுக்கு நிலையான விலை தேவை! நேரடி கொள்முதலுக்கு எதிர்பார்ப்பு
தானியங்களுக்கு நிலையான விலை தேவை! நேரடி கொள்முதலுக்கு எதிர்பார்ப்பு
தானியங்களுக்கு நிலையான விலை தேவை! நேரடி கொள்முதலுக்கு எதிர்பார்ப்பு
ADDED : மே 01, 2024 11:08 PM
உடுமலை : 'சிறு தானியங்கள் சாகுபடி பரப்பை மீண்டும் உடுமலை பகுதியில், அதிகரிக்க, அரசு நேரடி கொள்முதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, சிறுதானியங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதே போல், மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள, மலைவாழ் கிராமங்களிலும், இச்சாகுபடி குறைந்த பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, வெள்ளைச்சோளம், கம்பு, தினை, சாமை, கொண்டைக்கடலை உட்பட தானியங்கள், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சீசனில் சாகுபடியானது.
பிற மாவட்டங்களில் இருந்து, வியாபாரிகள் நேரடியாக உடுமலையில் வந்து, சிறுதானியங்கள் கொள்முதல் செய்யும் நிலை இருந்தது.
இந்நிலையில், நிலையான விலை கிடைக்காதது, கிணறு, போர்வெல் வாயிலாக இறவை பாசனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், சிறுதானியங்கள் சாகுபடிக்கு ஆர்வம் குறைந்தது.
தற்போது, சிறுதானியங்களால், தயாரிக்கப்படும் உணவுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், தேவைக்கேற்ப, உற்பத்தி இல்லாததால், அனைத்து பகுதிகளிலும், சிறுதானியங்களின், விலை கூடுதலாகவே உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, பரவலாக வெள்ளை சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, வெள்ளைச்சோளம் அதிகளவு விதைப்பு செய்து வந்தோம். ஆனால், முன்பு, போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது, காய்கறி சாகுபடிக்கு பெரும்பாலான விவசாயிகள் மாறி விட்டார்கள்.
இருப்பினும், மானாவாரி நிலங்களில், சிறுதானிய சாகுபடி செய்து வருகிறோம். சீசன் சமயங்களில், நேரடியாக, வெள்ளை சோளத்தை அரசு கொள்முதல் செய்தால், நல்ல விலை கிடைக்கும். சாகுபடி பரப்பும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

