மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க மாட்டோம்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க மாட்டோம்
ADDED : ஜூலை 22, 2026 08:02 PM
கருமத்தம்பட்டி: கோரிக்கைகளை நிறைவேற்றாததால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பதில்லை, என, சேடபாளையம் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேடபாளையத்தில், 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் நிலத்தை வகை மாற்றம் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதேபோல், எல்லைக்காடு பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்வதில் உள்ள பிரச்சனையை தீர்க்க கோரியும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அதிகாரிகள் சமாதானம் பேசுவதை தவிர எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தற்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பதில்லை, என முடிவு செய்து, அந்த மனுவை முன்னாள் ஊராட்சி தலைவர் வேலுசாமி தலைமையில், கணியூர் கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கினர்.
