/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகளில் புதிய மாணவர்களுக்கு 'வெல்கம்!'
/
கல்லுாரிகளில் புதிய மாணவர்களுக்கு 'வெல்கம்!'
ADDED : செப் 11, 2024 12:29 AM

முதலாமாண்டு மாணவர்களுக்கு கே.ஐ.டி., கல்லுாரியில் வரவேற்பு
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், '' உலகம் முழுவதும் என்ஜினியர்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த வேலை வாய்ப்புகளை பெற, தாய் மொழியுடன், ஆங்கில மொழித்திறனையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து, முதல்வர் ரமேஷ், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.
கொங்குநாடு கல்லுாரியில் சர்வதேச பயிலரங்கு
கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி உயிரித்தொழில் நுட்பவியல் துறை மற்றும் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பல்கலையின், மரபணு பொறியியல் துறையும் இணைந்து, சர்வதேச பயிலரங்கை நடத்தின.
' 21ம் நுாற்றாண்டின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் மதிப்பீடு' என்ற தலைப்பில் பயிலரங்கு நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர் லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் பல்கலையின் மரபணுப் பொறியியல் துறையின் பேராசிரியர் கல்பனா, புரதத் திருத்தம், மரபணுப் பொறியியல் குறித்தும், 21ம் நுாற்றாண்டின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மதிப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கல்லுாரியின் செயலர் வாசுகி, உயிரித்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் விஷ்ணுபிரியா, பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
அக்சயா பொறியியல் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
கிணத்துக்கடவில் அமைந்துள்ள அக்சயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா நடந்தது.
சிறப்பு விருந்தினர் பேச்சாளர் ஈரோடு மகேஷ், ''எத்தனை தொழில்நுட்ப வசதிகள் வந்தாலும், புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, அண்ணா பல்கலைத் தேர்வில், கல்லுாரி அளவில் ஒவ்வொரு துறையிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கல்லுாரியின் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் பவித்ரன், அறங்காவலர் தியாகராஜன், ஆலோசகர் ஜோசப் சேவியர், தலைமை நிர்வாக அதிகாரி கபிலன், துணை முதல்வர் முனைவர் சிவசங்கரி, அக்சயா கலை அறிவியல் கல்லுாரியின் இயக்குனர் ராஜசேகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பீடம்பள்ளியில் புதிய கூடைப்பந்து மைதானம்
பீடம்பள்ளி, ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில், புதிய கூடைப்பந்து மைதானம் துவக்கப்பட்டுள்ளது.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய கூடைப்பந்து விளையாட்டு நடுவர் ராஜன் வெள்ளிங்கிரிநாதன், ரிப்பன் வெட்டி முதல் பந்து சேவையை தொடங்கி வைத்தார். பின், ''விளையாட்டில் பங்கேற்கும் மாணவர்களின் உடல் நலமும், மனநலமும் சிறந்து விளங்கும்,'' என்று பேசினார்.
பள்ளி தாளாளர் நாகராஜன் பேசுகையில், ''இந்த கூடைப்பந்து மைதானம் வரும் தலைமுறையினர் பல சாதனைகள் புரிவ தற்கான, ஒரு மையமாக மாற வேண்டும்,'' என்றார். பள்ளியின் பொறுப்பாளர் அபிராமி, பள்ளி, கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
ரத்தினம் கல்லுாரியில் 'அனுக்கிரகா' விழா
ஈச்சனாரி, ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா, 'அனுக்கிரகா' என்ற பெயரில் பிரமாண்டமான விழாவாக நடந்தது.
ரத்தினம் குழும நிறுவனங்களின் தலைவர் மதன் செந்தில், துறைசார் நவீனம் சார்ந்த தொழில்நுட்பங்களை கற்று, அதன் மூலம் பொதுமக்களின் பிரச்னை களுக்கு தீர்வளிக்கும் தொழில்முனைவோராக மாணவர்கள் உருவாக வேண்டும் என்று பேசினார். ரத்தினம் கல்வி குழுமங்களின் இயக்குனர் சீமா, சி.இ.ஒ., மற்றும் செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் நாகராஜ், ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் துணை முதல்வர் கீதா, பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.
பி.பி.ஜி., கல்லுாரியில்முதலாம் ஆண்டு வரவேற்பு விழா
சரவணம்பட்டி, பி.பி.ஜி., தொழில் நுட்ப கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெகு விமர்சையாக நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரி பிச்சாண்டி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், '' கல்லுாரி காலத்திலேயே பன்முக திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். சுய முன்னேற்றம் மட்டுமின்றி, சமூக முன்னேற்றத்திற்கும் பொறியியல் கல்வியை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.
பி.பி.ஜி., கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் அக்சய், தாளாளர் சாந்தி, அஸ்வின் மருத்துவமனை இயக்குனர் அஸ்வின், பி.பி.ஜி., தொழில் நுட்ப கல்லுாரியின் முதல்வர் நந்தகுமார், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.