/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பை கிடங்கில் என்ன தான் நடக்கிறது? நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஆய்வு

ADDED : மார் 01, 2025 05:50 AM

கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கு செயல்பாடு, பில்லுார்-3வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் லலித் ஆதித்யா நீலம் நேற்று ஆய்வு செய்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடு மற்றும் உக்கடம் பெரிய குளத்தில் அமைத்துள்ள மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி கூரை செயல்பாடுகளை, இணை ஆணையர் நேரில் பார்வையிட்டார்.
பின், வெள்ளலுார் குப்பை கிடங்கிற்கு சென்ற அவர், 'வாட்ச் டவரில்' ஏறி, எவ்வளவு துாரத்துக்கு குப்பை கொட்டப்பட்டிருக்கிறது என பார்வையிட்டார்.
நகரில் இருந்து நாளொன்றுக்கு, எத்தனை டன் குப்பை கொண்டு வரப்படுகிறது; என்னென்ன வழிகளில் கையாளப்படுகிறது என, பொறியியல் பிரிவு அதிகாரிகள் விளக்கினர்.
'பயோமைனிங்' முறை, மக்கும் குப்பையில் காஸ் மற்றும் உரம் தயாரிக்கும் முறைகளை விளக்கினர். கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டால், அணைப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும், 'பயோமைனிங் பேஸ்-2' திட்டம், கவுண்டம்பாளையம், கோவைப்புதுார், பீளமேடு ஆகிய இடங்களில், குப்பை மாற்று மையம் விரைவில் துவங்க இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுக்கரையில் செயல்படும் எம்.சி.சி.,க்கு சென்று, மக்கும் குப்பையில் உரம் தயாரிப்பதை பார்வையிட்டு, செயல்முறைகளை கேட்டறிந்தார். பின், பில்லுார் அணைக்கு சென்று விபரங்களை கேட்டறிந்தார்.
மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொ) முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.