/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி மதிப்புக்கூட்டு தொழிற்சாலை என்னாச்சு! தேர்தலுக்கு துாசிதட்டப்படும் வாக்குறுதியாச்சு
/
தக்காளி மதிப்புக்கூட்டு தொழிற்சாலை என்னாச்சு! தேர்தலுக்கு துாசிதட்டப்படும் வாக்குறுதியாச்சு
தக்காளி மதிப்புக்கூட்டு தொழிற்சாலை என்னாச்சு! தேர்தலுக்கு துாசிதட்டப்படும் வாக்குறுதியாச்சு
தக்காளி மதிப்புக்கூட்டு தொழிற்சாலை என்னாச்சு! தேர்தலுக்கு துாசிதட்டப்படும் வாக்குறுதியாச்சு
ADDED : ஏப் 15, 2024 09:02 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில் தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பு நிறுவனம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத விவசாயிகளின் கோரிக்கை, இந்த தேர்தலிலும் துாசி தட்டப்பட்டு, அனைத்து வேட்பாளர்களின் வாக்குறுதியில் இடம் பிடித்துள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், அதிகளவு தென்னை மற்றும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த படியாக மற்ற வகை காய்கறி பயிர்கள் சாகுபடி உள்ளது.
இப்பகுதியில், கடந்த ஆண்டு 750 முதல் 800 ஏக்கர் வரை தக்காளி பயிரிடப்பட்டது. விளையும் தக்காளியை, கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு ஏல முறையில் விற்பனை செய்ய விவசாயிகள் வந்து செல்கின்றனர்.
தக்காளி விலை அதிகரிக்கும் போது, விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கிறது. ஆனால் தக்காளி விலை சரியும் போது, விற்பனை ஆகாமல் தேக்கமடைகிறது. அந்த சமயத்தில் பெரும்பாலான விவசாயிகள், தக்காளியை ரோட்டோரத்தில் கொட்டி செல்கின்றனர்.
சிலர், விலை குறையும் தருவாயில் தக்காளி பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு, நஷ்டம் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால், கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில், தக்காளி சாகுபடி பரப்பு மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளது.
இதை தவிர்க்க, கிணத்துக்கடவு பகுதியில் விவசாயிகள் நலன் கருதி தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பு நிறுவனம் துவங்க வேண்டும். இதனால், தக்காளி விலை குறையும் நேரத்தில், மதிப்புக்கூட்டு பொருள் தயாரித்து விவசாயிகளுக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியும். மேலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஏதுவாக இருக்கும், என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
தக்காளி சாகுபடி விவசாயிகளின் இந்த கோரிக்கை ஒவ்வொரு தேர்தலிலும், வேட்பாளர்களின் வாக்குறுதியில் கட்டாயம் இடம் பெறுகிறது. அதன்பின், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த தேர்தலிலும், அனைத்து தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., என, மூன்று பிரதான கட்சி வேட்பாளர்களும் வாக்குறுதி அளித்துள்ளனர். யார் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

