/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீர்மானத்தில் உள்ள டாய்லெட்டுகள் எங்கே? தி.மு.க., கவுன்சிலரின் கேள்வியால் அதிர்ச்சி
/
தீர்மானத்தில் உள்ள டாய்லெட்டுகள் எங்கே? தி.மு.க., கவுன்சிலரின் கேள்வியால் அதிர்ச்சி
தீர்மானத்தில் உள்ள டாய்லெட்டுகள் எங்கே? தி.மு.க., கவுன்சிலரின் கேள்வியால் அதிர்ச்சி
தீர்மானத்தில் உள்ள டாய்லெட்டுகள் எங்கே? தி.மு.க., கவுன்சிலரின் கேள்வியால் அதிர்ச்சி
ADDED : செப் 15, 2024 11:59 PM
கோவை : கோவை மாநகராட்சி மன்ற கூட்டம், விக்டோரியா ஹாலில் நடந்தது. அதில், மாநகராட்சி பொது, சமுதாய கழிப்பிடங்கள் பராமரிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு கால நீட்டிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் விவாதத்துக்கு வைக்கப்பட்டன. தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 86, 87, 88 ஆகிய வார்டுகளில் உள்ள ஒன்பது கழிப்பிடங்களை பராமரிப்புக்கு ஒப்படைப்பதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.
தி.மு.க.,வை சேர்ந்த 86வது வார்டு கவுன்சிலர் அஹமது கபீர் பேசுகையில், ''மூன்று வார்டுகளில் தலா ஒன்று வீதம் மூன்று கழிப்பிடங்களே இருக்கின்றன. தீர்மானத்தில் ஒன்பது கழிப்பிடங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள 6 டாய்லெட்டுகள் எங்கே,'' என, கேள்வி எழுப்பினார். தீர்மானத்தில் தவறான தகவல்கள் இடம் பெற்றிருப்பதால், இத்தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினார். இதை ஏற்று, 35ம் எண்ணுள்ள இத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயர் ரங்கநாயகி அறிவித்தார்.
இதேபோல், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள கழிப்பிடங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்த தீர்மானம் வந்தது. 74வது வார்டில், 9 கழிப்பிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இவ்வார்டு கவுன்சிலர் சங்கர், ''வார்டில் ஐந்து கழிப்பறைகளே இருக்கின்றன' என்றார்.
அதற்கு, 'தீர்மானத்தில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து விடுகிறோம்' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.
எம்.பி.,க்கு அலுவலகம்
நாடாளுமன்ற அலுவலக பணிக்காக, கோவை மாநகராட்சி கட்டடத்தை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தற்காலிகமாக ஒதுக்கித் தர, கோவை எம்.பி., ராஜ்குமார் கோரிக்கை விடுத்திருந்தார்.
எம்.பி.,க்கு தனியறை ஒதுக்க, மாநகராட்சி பிரதான அலுவலகத்திலோ, மத்திய மண்டல அலுவலகத்திலோ இட வசதியில்லை. அதனால், 83வது வார்டு வ.உ.சி., மைதானத்தில் மேடைக்கு கீழுள்ள 'ரோஸ்டர்' கட்டடத்தை, பொதுப்பணித்துறை மதிப்பீடு அடிப்படையில், ரூ.15,080 என வாடகை நிர்ணயித்து, 18 சதவீத சேவை வரியுடன் சேர்த்து, தற்காலிகமாக ஒதுக்கீடு செய்ய மன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
வாடகையின்றி இலவசமாக ஒதுக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன், 'எம்.பி., அலுவலகத்துக்கான வாடகையை, மத்திய அரசு வழங்குகிறது; அதை ஏன் வேண்டாம் என கூறுகிறீர்கள். மாநகராட்சிக்கு இழப்பு தானே. வாடகையை வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார்.இதையடுத்து அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், பொள்ளாச்சி எம்.பி., தொகுதிக்குள், மாநகராட்சியை சேர்ந்த, 30 வார்டுகள் வருவதால், அவருக்கும் அலுவலகம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டுமென, தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் கோரிக்கை விடுத்தார்.