/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யலில் கழிவுநீர் கலக்குமிடம் எது? கண்டறிந்து தடுக்க இதுவே நல்ல நேரம்!
/
நொய்யலில் கழிவுநீர் கலக்குமிடம் எது? கண்டறிந்து தடுக்க இதுவே நல்ல நேரம்!
நொய்யலில் கழிவுநீர் கலக்குமிடம் எது? கண்டறிந்து தடுக்க இதுவே நல்ல நேரம்!
நொய்யலில் கழிவுநீர் கலக்குமிடம் எது? கண்டறிந்து தடுக்க இதுவே நல்ல நேரம்!
ADDED : ஏப் 22, 2024 01:23 AM

தொண்டாமுத்தூர்;கோடையில் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் ஆற்றில், கழிவு நீர் தேங்கி நிற்கும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது. எங்கே கழிவு நீர் கலக்கிறது என்பதை கண்டறிய, இதுவே நல்ல நேரம் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, ஆயிரக்கணக்கான ஓடைகள் சிற்றோடைகள் இணைந்து, தொம்பிலிபாளையம், கூடுதுறையில், கோவையின் ஜீவநதியான நொய்யல் ஆறு, உருவெடுக்கிறது.
இந்த நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர் வழியாக கரூரில் காவேரியில் இணைகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில், மழைப்பொழிவிற்கு பஞ்சமில்லாததால், ஆண்டுக்கு, 4 முறை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
நொய்யல் ஆற்றில் வரும் நீர், தடுப்பணைகள், கிளை வாய்க்கால்கள் மூலமாக குளங்களுக்கு சென்று, நிலத்தடி நீர் மட்டம் உயரவும், விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அரசும், பொதுமக்களும் கவனம் செலுத்தாததால் நொய்யல் ஆறு பாழாகி வருகிறது.
நொய்யல் ஆறு துவங்கும், மத்வராயபுரம் ஊராட்சியில் இருந்து ஆறு மற்றும் வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சிலர் எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் நேரடியாக கழிவுநீரை, ஆற்றில் கலந்து வருகின்றனர்.
இதுவே நல்ல நேரம்
இதனால், நீர் மாசுபடுவதோடு, விளைநிலங்களும் மாசுபட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு மேலாக, நொய்யல் ஆறு தண்ணீர் இன்றி, வறண்டு காணப்படுகிறது. தண்ணீருக்கு பதிலாக கழிவு நீரே ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இதனால், நொய்யல் ஆற்றில் எந்தெந்த பகுதியில் கழிவுநீர் கலக்கிறது என்பதை சுலபமாக கண்டறிய, இது போல் வேறு வாய்ப்பு கிடைக்காது.
அரசு, அதனை கண்டறிந்து, நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாமல், கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். அதோடு, ஆற்றில் நீர் சேகரிக்கும் பகுதிகளான தடுப்பணைகள், குளங்களையும் தூர்வார, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

