/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்? கவுன்சிலுக்கா... அதிகாரிகளுக்கா மேயரிடம் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு!
/
மாநகராட்சி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்? கவுன்சிலுக்கா... அதிகாரிகளுக்கா மேயரிடம் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு!
மாநகராட்சி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்? கவுன்சிலுக்கா... அதிகாரிகளுக்கா மேயரிடம் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு!
மாநகராட்சி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்? கவுன்சிலுக்கா... அதிகாரிகளுக்கா மேயரிடம் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு!
ADDED : செப் 11, 2024 01:14 AM
கோவை;சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 18 மாதங்களே இருக்கின்றன; வேலைகள் எதுவும் நடப்பதில்லை. அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என, மேயர் தலைமையில் நடந்த சிறப்பு கூட்டத்தில், கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தங்களது குமுறல்களை கொட்டித் தீர்த்தனர்.
கோவை மாநகராட்சியில், லோக்சபா தேர்தல் சமயத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டன. தேர்தல் முடிந்து நான்கு மாதங்களாகியும், இன்னும் பணிகள் துவங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு, கவுன்சிலர்கள் மத்தியில் உள்ளது. இது, மண்டல கூட்டங்கள் மற்றும் நிலைக்குழு கூட்டங்களில், எதிரொலித்து வருகிறது.
இப்பிரச்னை, பொறுப்பு அமைச்சர் முத்துசாமி கவனத்துக்குச் சென்றது. ஒவ்வொரு வார்டிலும் என்னென்ன பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்ய வேண்டுமென, பட்டியலிட்டு கடிதம் வழங்க, கவுன்சிலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இச்சூழலில், வரும், 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாமன்ற கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கொரு விதமாக பேசியது போல், மாமன்ற கூட்டத்திலும் எதிரொலிக்கும் என்கிற பேச்சு உலா வருகிறது.
களமிறங்கினார் மேயர்
அவர்களை சமாதானம் செய்யும் வகையில், மண்டல வாரியாக தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை, மேயர் ரங்கநாயகி கேட்கத் துவங்கியுள்ளார். இதற்கான சிறப்பு கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நிலுவை பணிகள் என்னென்ன, அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா என கேட்டறியப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் கூறியதாவது:
கோவை மாநகராட்சி பகுதியில், ஏராளமான பணிகள் நிலுவையில் இருக்கின்றன. ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால், ஏற்கனவே செய்த வேலைகளுக்கு பணம் தரவில்லை என்கிறார்கள். ஆனால், அதிகாரிகள் முடிவு செய்யும் வேலைகள் உடனடியாக நடக்கின்றன. அவ்வேலைகளுக்கு பில் கொடுக்கிறார்கள். மாமன்றத்தில் பின்னேற்பு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
மண்டல கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை, மாமன்ற கூட்டத்துக்கு கொண்டு வருகிறார்கள். தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
மண்டல அளவிலான வார்டு குழு, நிலைக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது.
கவுன்சிலுக்கு (மாமன்றம்) அதிகாரமா; அதிகாரிகளுக்கு அதிகாரமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தை வழங்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது என்றால், வார்டு குழுக்களில் தீர்மானங்கள் கொண்டு வர வேண்டாம். மாமன்ற கூட்டத்தை அதிகாரிகளை வைத்து நடத்திக் கொள்ளுங்கள். மாநகராட்சியில் என்ன வேலை நடக்கிறதென, கவுன்சிலர்களுக்கு தெரிவதில்லை.
மாநகராட்சி அலுவலகத்துக்கு, அதிகாரிகள் வருவதேயில்லை. எந்நேரமும் ஆர்.எஸ்.புரம் கலையரங்க அலுவலகத்தில் இருக்கின்றனர்; அதிகாரிகளை சந்திக்க வரும் பொதுமக்கள், எங்களை கேள்வி கேட்கிறார்கள்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 18 மாதங்களே இருக்கின்றன. அதற்கு தயாராக வேண்டுமெனில், மாநகர பகுதிகளில் மக்கள் விரும்பும் வேலைகளை செய்து முடிக்க வேண்டும். ஒத்துவராத அதிகாரிகளை இட மாறுதல் செய்ய வேண்டும். வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினோம்.
இவ்வாறு, கவுன்சிலர்கள் கூறினர்.