/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.ஐ., மீது தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? த.மா.கா., தலைவர் வாசன் கேள்வி
/
சி.பி.ஐ., மீது தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? த.மா.கா., தலைவர் வாசன் கேள்வி
சி.பி.ஐ., மீது தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? த.மா.கா., தலைவர் வாசன் கேள்வி
சி.பி.ஐ., மீது தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? த.மா.கா., தலைவர் வாசன் கேள்வி
ADDED : ஜூன் 30, 2024 11:57 PM

கோவை;''வெளிப்படை தன்மையுடன் செயல்படும் அரசாக இருந்திருந்தால் சி.பி.ஐ., விசாரணை வைத்திருக்க வேண்டும்; சி.பி.ஐ., மீது தி.மு.க., அரசுக்கு பயம் ஏன்? என, த.மா.கா., தலைவர் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொங்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் த.மா.கா., தலைவர் வாசன் தலைமையில் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்தது.
நிறைவில், வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
காமராஜர் பிறந்த நாளான வரும், 15ம் தேதி சென்னையில் அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளோம். முன்னதாக, 14ம் தேதி மாலை 4:00 மணிக்கு, திருச்சியில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் கட்சியின் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் தொடர் விபத்தால் ஏழை, எளிய மக்களின் உயிர் பலியாகிறது. இது நடக்காது கவனிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது எங்களது கொள்கை. தமிழக அரசின் மெத்தனத்தால் கள்ளக்குறிச்சியில், 60க்கும் மேற்பட்ட, சம்பாதிக்கும் குடும்ப தலைவர்கள் உயிரிழந்துள்ளது வேதனைக்குரியது. இதைவிட வெட்கக்கேடு தமிழகத்திற்கு தேவையில்லை.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை மீறிய அரசு தி.மு.க., அரசு. இன்று டாஸ்மாக் கடைகளை குறைப்பது சாத்தியமில்லை என, ஏளனமாக கூறுவது மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம். அமைச்சர் ஒருவர் சபை நாகரிகம் இல்லாமல் டாஸ்மாக்கில் 'கிக்' ஏறுகிறது, குடிப்பவர்களை குறைக்க முடியாது எனக்கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
கள்ளக்குறிச்சி விஷயத்தில் உயிர் இழப்புகள் யாரால் நடந்தது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. வெளிப்படை தன்மையுடன் செயல்படும் அரசாக இருந்திருந்தால் சி.பி.ஐ., விசாரணை வைத்திருக்க வேண்டும்.
சி.பி.ஐ., மீது தி.மு.க., அரசுக்கு பயம் ஏன். பா.ஜ., மேலிட பொறுப்பாளர்களுடன் நான் சென்று, தாழ்த்தப்பட்டோர் ஆணைய சேர்மனிடம் இதுகுறித்த உண்மை நிலையை விளக்கி உள்ளேன். 'நீட்' தேர்வால் மாணவர்கள் வளர்ச்சி அடைந்து கொண்டு செல்லும் இந்நேரத்தில் அதை முடக்க நினைப்பது நியாயம் அல்ல.
தி.மு.க.,-காங்., கூட்டணி கட்சியினர் கல்வியில் அரசியலை புகுத்த நினைப்பது வேதனைக்குரியது. கள்ளுக் கடை திறப்பதற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. தமிழகத்தில் பண்டைய காலத்தில் நீதிநெறி பிறழாமல், வெளிப்படை தன்மையோடு ஆட்சி நடந்ததை எடுத்துக்காட்டுவதுதான் செங்கோல். தமிழ், தமிழ், தமிழ் என்று தம்பட்டம் அடிக்கும் தி.மு.க., அரசு செங்கோலை இழிவுபடுத்துகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.