/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுட்டெரிக்கும் கோடையால் காட்டுத்தீ அபாயம் ஊருக்குள் வரும் வன விலங்குகளுக்கு 'செக்'
/
சுட்டெரிக்கும் கோடையால் காட்டுத்தீ அபாயம் ஊருக்குள் வரும் வன விலங்குகளுக்கு 'செக்'
சுட்டெரிக்கும் கோடையால் காட்டுத்தீ அபாயம் ஊருக்குள் வரும் வன விலங்குகளுக்கு 'செக்'
சுட்டெரிக்கும் கோடையால் காட்டுத்தீ அபாயம் ஊருக்குள் வரும் வன விலங்குகளுக்கு 'செக்'
ADDED : மார் 02, 2025 10:53 PM

மேட்டுப்பாளையம்,; காரமடை வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்கவும், வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட காரமடை வனச்சரகத்தில் மானார் பிரிவு, வீரக்கல், குண்டூர், அத்திக்கடவு, கொரவன்கண்டி, பில்லூர், முள்ளி போன்ற அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, யானை என பல்வேறு வகையிலான வனவிலங்குகள் உள்ளன.
வனத்தில் வறட்சி
தற்போது வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வனப்பகுதிகளில் உள்ள புல், செடி, பழமையான மரங்கள் காய்ந்து வருகின்றன. இதனால், காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. வெள்ளியங்காடு அருகே பெடதாபுரம் கோவில்கரடு பகுதியில், பிப்.,26ல் காட்டுத்தீ பரவியது. காரமடை வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தற்போது வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் வனப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களில், தண்ணீர் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் அபாயம் உள்ளது.
தீத்தடுப்பு கோடு
காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறியதாவது:-
வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, இதுவரை 25 கி.மீ., தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இப்பணி நடந்து வருகிறது. மேலும், அருகில் உள்ள கிராமங்கள், தோட்டங்களில் வசிக்கும் மக்களிடம், வனப்பகுதி அருகில் குப்பை தீ வைத்து எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். சாலையில் செல்வோர் பீடி, சிகரெட் பற்ற வைக்கக்கூடாது. சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது போன்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம். வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க, குண்டூர், வெள்ளியங்காடு கிழக்கு சுற்றுகளில் தண்ணீர் தொட்டிகள் சுத்தம்செய்யப்பட்டு, தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.--