/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகள் கடந்து செல்ல உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
/
வனவிலங்குகள் கடந்து செல்ல உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
வனவிலங்குகள் கடந்து செல்ல உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
வனவிலங்குகள் கடந்து செல்ல உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
ADDED : மே 27, 2024 11:22 PM
மேட்டுப்பாளையம்:ஊட்டி சாலையில், கல்லாறு வனப் பகுதியில், யானைகள் உட்பட வனவிலங்குகள் செல்ல, உயர்மட்ட பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆய்வு செய்து ஓராண்டாகியும், இன்னும் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை ஏதும் இல்லாமல் உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு மலைப்பகுதியில் இருந்து, குன்னூர் சாலை துவங்குகிறது.
இந்த மலைப்பகுதியின் ஓரத்தில், மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதி வழியாக ஆண்டுக்கு, 50 லிருந்து 60க்கும் மேற்பட்ட யானைகளும், நூற்றுக்கணக்கான மான்கள், புலி, சிறுத்தை, காட்டு மாடுகள் என ஏராளமான வனவிலங்குகள், சாலையைக் கடந்து சென்று வருகின்றன.
அடிக்கடி வனவிலங்குகள் சாலையைக் கடந்து செல்வதால், வாகன போக்குவரத்து தடைபட்டு வருகிறது. மேலும் வனவிலங்கு, மனித மோதல்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த வனவிலங்கு மனித மோதல்களை தவிர்க்க, கல்லாறு பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வனத்துறையினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் கடந்தாண்டு தேசிய நெடுஞ்சாலை துறை, வனத்துறை அதிகாரிகள் கல்லாறு பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
கல்லாறு தூரிப்பாலம் அருகே துவங்கி, குன்னூர் மலைப்பாதையில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு இடையே, சாலையில் இணையும் வகையில், 750 மீட்டருக்கு உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்தனர். இந்த ஆய்வு வெறும் பேப்பர் வடிவிலேயே உள்ளது. திட்டமாக இன்னும் மாறவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வனவிலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில், கல்லாறு தூரிப்பாலத்தில் இருந்து, குன்னூர் சாலை வரை, உயர்மட்ட பாலம் கட்டுவதாக நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
தற்போது குடிநீருக்காக, வனவிலங்குகள் அங்குமிங்கும் அலை மோதி வருகின்றன. அதனால் சாலையில் விலங்குகளின் நடமாட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிகாரிகள் ஆய்வு செய்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது.
ஆனால் உயர் மட்ட பாலம் கட்டுவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.
எனவே கல்லாறு பகுதியில், வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக, விரைவில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.
திட்டம் எப்போது துவங்கும்
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'உயர்மட்ட பாலம் கட்டு வது குறித்து, ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர், 'டிராப்ட் டீடைல் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்' மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இடத்தை ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்த பின் திட்டம் துவங்கும்,' என்றார்.