/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவார்களா தாத்தாவும் பாட்டியும்?
/
வருவார்களா தாத்தாவும் பாட்டியும்?
ADDED : ஆக 25, 2024 01:09 AM

முன்னொரு காலத்தில் 'ரீவைண்ட்' பண்ணிப் பார்த்தோம் என்றால், ஒரு குழந்தைக்கு, சித்தி தலை சீவி விடுவார். அத்தை சோறு ஊட்டுவார். பெரியப்பா, பள்ளிக்கு கொண்டு போய் விட்டு வருவார். மாலை திரும்பியதும், கூட்டாக விளையாட்டு. ஒரு வீட்டுக்குள் அவ்வளவு கூட்டம் இருக்கும். அதுவும் கூட்டுக் குடும்பமாக.
காலங்கள், அப்படியே உருண்டோடி விட்டன. உறவில் இருந்து உணவு வரை, தலைகீழ் மாற்றம். பெரும்பாலான வீடுகளில், தாத்தா, பாட்டியின் அன்பை பெறாமலேயே குழந்தைகள் வளர்கின்றனர். தாத்தா, பாட்டிகளிடம் ஏராளமான கதைகள் இருக்கும்.
அதை கேட்கத்தான் செவிகள் இல்லை. கதை நேரத்தை மறந்து, மொபைல் போன் பார்த்து, துாக்கத்தை தள்ளி வைக்கின்றனர், இக்கால குழந்தைகள்.
நினைவூட்டிய பள்ளி
ஆனால், பழைய காலம் எப்படி இருந்தது என்று நினைவூட்டியது ஒரு பள்ளி. ஜென்மாஸ்டமி மற்றும் தாத்தா பாட்டிகள் தினம், கோவை பெர்க்ஸ் பப்ளிக் பள்ளியில், தாமிரா கற்றல் மைய வளாகத்தில் நடந்தது.
பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர் வேடத்திலும், மாணவிகள் ராதை வேடத்திலும் தங்களது தாத்தா, பாட்டிகளுடன் உற்சாகமாக பங்கேற்றனர்.
நம் கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன. கோகுலத்தில் யசோதையின் மைந்தனாக வாழ்ந்த, குறும்புக்கார கண்ணனின் லீலை கதைகளை மாணவர்கள் உற்சாகமாக கேட்டனர்.
கிருஷ்ணரின் பக்தி பாடல்களை பாடியும், பாடல்களுக்கு நடனம் ஆடியும், மாணவர்கள் பார்வையாளர்களை அசத்தினர்.
தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகள் வளரும் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தாத்தாக்கள், பாட்டிகள் இதில், வயதை கடந்து பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும், பூ கட்டுதல் போன்ற கலை நிகழ்வுகள், போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
'' மாணவர்களின் குழந்தை பருவத்தில், தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பு, அன்பும், உடனிருப்பும் அவசியம். இன்றைய அழகிய நினைவு, மாணவர்களுக்கும், அவர்களின் தாத்தா, பாட்டிகளுக்கும் நீங்கா நினைவுகளை அள்ளித்தந்திருக்கும்,'' என்றார் பெர்க்ஸ் கல்விக்குழுமத்தின் தாளாளர் உஷா இளங்கோ.

