/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமூக வலைத்தள தகவல்களால்... குழப்பம்!உள்ளாட்சிகள் தரம் உயர்கிறதா?
/
சமூக வலைத்தள தகவல்களால்... குழப்பம்!உள்ளாட்சிகள் தரம் உயர்கிறதா?
சமூக வலைத்தள தகவல்களால்... குழப்பம்!உள்ளாட்சிகள் தரம் உயர்கிறதா?
சமூக வலைத்தள தகவல்களால்... குழப்பம்!உள்ளாட்சிகள் தரம் உயர்கிறதா?
ADDED : ஜூலை 06, 2024 01:45 AM

கோவை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், வரும் டிசம்பரில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, தேர்தலை நடத்த, தமிழக தேர்தல் கமிஷன் பணிகளை துவக்கிஉள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் ஒரு புறமும் நடந்து வருகிறது.
அதன்படி, கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகங்களிடம், எந்தெந்த ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை தங்களது நிர்வாகத்துடன் இணைக்கலாம் என, உச்தேச பட்டியலை கேட்டுள்ளது.
சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், என மட்டும் அறிவித்திருந்தார். ஆனால், எவை, எதனுடன் இணைக்கப்படும், என, அறிவிக்கவில்லை.
சமூக வலைத்தளங்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கோவை மாநராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளின் பெயர் பட்டியல் வலம் வந்து கொண்டுள்ளது. அதேபோல், எந்தெந்த பெரிய மற்றும் வருமானம் உள்ள ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக்க வேண்டும், எந்தெந்த பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என, செயல் அலுவலர்கள், நகராட்சி கமிஷனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் எந்தெந்த ஊராட்சிகளை இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் வாட்ஸ் அப் குழுக்களில் பரவி வருவது உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறுகையில், 'ஊராட்சிகளை பேரூராட்சியாகவோ, அல்லது அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைப்பதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மத்திய அரசு திட்டங்களும், நிதியும் ஊராட்சிக்கு நேரடியாக கிடைத்து வருகின்றன. அவை கிடைக்காது.
நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பர். வரியினங்கள் அதிகரிக்கும். குறைந்த வருவாய் உள்ள கிராமப்புற மக்கள் நெருக்கடிக்குள் உள்ளாவர். அதனால், பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்கலாம். தரம் உயர்த்துகிறேன் என்ற பெயரில் எது செய்தாலும் மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். இதுவரை தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் எவ்வகையான முன்னேற்றம், வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்தால், எந்த பயனும் இல்லை என்பதே விடையாக கிடைக்கும்.
தற்போது, சமூக வலைத்தளங்களில் புதிது புதிதாக தகவல்கள் பரவுவதால் ஒரே குழப்பமாக உள்ளது. எதை நம்புவது; எவற்றை விடுப்பது என, தெரியவில்லை,' என்றனர்.