/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட பெண் வாந்தி, வயிற்றுவலியால் அவதி
/
ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட பெண் வாந்தி, வயிற்றுவலியால் அவதி
ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட பெண் வாந்தி, வயிற்றுவலியால் அவதி
ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட பெண் வாந்தி, வயிற்றுவலியால் அவதி
ADDED : மார் 02, 2025 04:11 AM
கோவை : சிக்கன் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கிழுவன்காட்டூர் பகுதியை சேர்ந்த கார்த்திகா,25, கோவையிலுள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2024, மே 6ம் தேதி, கோவை, காந்திபுரத்திலுள்ள, கே.எப்.சி., ஓட்டலுக்கு சாப்பிட சென்றவர், 'பெரி பெரி சிக்கன்' சாப்பிட்டார்.
அதன் விலை 398 ரூபாய். சிக்கன் சாப்பிட்டு, அன்று இரவு அறைக்கு சென்று துாங்கினார். மறு நாள் காலை வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்தார்.
உடல் நிலை பாதிக்கப்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதித்த போது, கார்த்திகா சாப்பிட்ட சிக்கன் உணவு, 'புட் பாய்சன்' ஆனது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று குணமடைந்த அவர், கே.எப்.சி., நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர்கள் பதில் அளிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட அவர் இழப்பீடு வழங்க கோரி, வக்கீல் எஸ்.ரஞ்சிதா வாயிலாக, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், 'சுகாதாரமற்ற, கெட்டுப்போன சிக்கனை சப்ளை செய்துள்ளனர். கெட்டுப்போன சிக்கனை சாப்பிட்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக' குறிப்பிட்டு இருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, கே.எப்.சி., தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'கே.எப்.சி.,யில் சிக்கன் சாப்பிட்டதால் தான், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறுவது சரியானது அல்ல. வேறு உடல்நிலை காரணம் இருக்கலாம்' என்று கூறியிருந்தனர்.
விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'ஓட்டலில் சாப்பிட்ட பிறகு தான், மனுதாரருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். உடல்நிலை பாதிப்புக்கு, அவர் சாப்பிட்ட உணவு 'புட்பாய்சன்' ஆனதேகாரணம் என்று, மருத்துவர்களும் சான்றிதழ் அளித்துள்ளனர்.
எனவே, எதிர்மனுதாரர் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.