/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புரோக்கர்களுக்கு மட்டும் 10 நாளில் வேலை நடக்குது' மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்
/
'புரோக்கர்களுக்கு மட்டும் 10 நாளில் வேலை நடக்குது' மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்
'புரோக்கர்களுக்கு மட்டும் 10 நாளில் வேலை நடக்குது' மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்
'புரோக்கர்களுக்கு மட்டும் 10 நாளில் வேலை நடக்குது' மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்
ADDED : ஆக 29, 2024 02:46 AM

கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம், அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது; மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் செந்தில் குமரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
சாந்தி, பணிகள் குழு தலைவர்: 63வது வார்டு முருகன் நகர், கன்னிகா பரமேஸ்வரி நகரில் கழிவு நீர் தேங்குகிறது. எட்டு மாதமாக சொல்லி வருகிறேன். சாக்கடை கால்வாய் துார்வாரப்படவில்லை.
பாதாள சாக்கடை அடைப்பு நீக்க வண்டி வருவதேயில்லை. ராமலிங்கம் நகர், ஜோதி நகரில் அடைப்பு ஏற்பட்டு, ரோட்டில் கழிவு நீர் பொங்குகிறது.
மனோகரன், 81வது வார்டு: நிலைக்குழு தலைவர் சொல்லும் கோரிக்கையை கூட செய்து தரவில்லை. அடுத்த கூட்டத்தை கமிஷனர் தலைமையில் நடத்துங்கள். இல்லையெனில், கூட்டம் நடத்தாதீர்கள்.
அன்னக்கொடி, 49வது வார்டு: மலைபோல் குப்பை தேங்கியிருக்கு. 21 வண்டி கொடுத்தாங்க. இப்ப, அஞ்சுதான் ஓடுது. மற்ற வண்டிகள் மாயமாகி விட்டன. சுகாதாரப் பணியை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்; நாங்களே பார்த்துக் கொள்கிறோம். பொதுமக்களுக்கு பதில் சொல்லிக் கொள்கிறோம்.
தண்ணீர் ஆபரேட்டர் லீவு போட்டால், சப்ளை செய்வதற்கு ஆளில்லை; பொதுமக்கள் சாலை மறியல் செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். எங்கே போனாலும் அவமானமா இருக்கு. குப்பை அள்ள டாடா ஏஸ் வாகனம் வேண்டாம்; தள்ளுவண்டியே போதும்.
ஷர்மிளா, 70வது வார்டு:சின்ன சின்ன வேலைகள் கூட நடக்காமல் இருப்பதால் கேட்கிறோம். கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய தயாராக இருக்கிறோம். எனது வார்டுக்கு, 22 குப்பை வண்டி ஒதுக்கப்பட்டுள்ளது.
வார்டுக்குள் சின்ன சின்ன வீதிகளே இருக்கின்றன. பெரிய வண்டி செல்ல முடியாது; 10 வண்டிகளே மாற்றித் தரப்பட்டுள்ளன. மற்ற வண்டிகளையும் மாற்றித் தர வேண்டும். 90 துாய்மை பணியாளர்களில், 27 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
அவ்விடத்துக்கு தற்காலிக ஊழியர்களோ அல்லது ஒப்பந்த ஊழியர்களோ நியமிக்க வேண்டும். இப்போது, 49 பேரே பணிபுரிகின்றனர். குப்பை வண்டிக்கு, 88 டப்பா தேவை.
கிருஷ்ணசாமி ரோட்டில், நான்கு மாதங்களுக்கு முன் புதிதாக ரோடு போடப்பட்டது; இரு பக்கமும் குழிகள் உருவாகி விட்டன; நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களுக்குள் குழி வந்து விட்டது; அந்தளவுக்குதான் ரோடு தரமாக போடப்படுகிறதா.
அலிமா பேகம், 84வது வார்டு: பாதாள சாக்கடை சேம்பர் நிரம்பி வழிகிறது. அடைப்பு நீக்க வண்டி கேட்டால், ரிப்பேர் என சொல்கிறார்கள். கழிவு நீர் பொங்கி, வீட்டுக்குள் வருகிறது. குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக, மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.
கவுன்சிலர்கள் பேசி முடித்ததும், 26 தீர்மானங்கள் 'ஆல்-பாஸ்' முறையில் ஒரே நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டன.
பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்னை ஏற்படுகிறது. அடைப்பு ஏற்படும் இடங்களில் நீக்கப்படுகிறது. புதிய குழாய் பதிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசிடம் நிதி பெற வேண்டும்.
- மீனா
மத்திய மண்டல தலைவர்