/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிநாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகா பயிற்சி
/
வெளிநாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகா பயிற்சி
ADDED : ஆக 13, 2024 10:26 PM

தொண்டாமுத்தூர்;கோவை ஈஷா யோகா மையத்தில், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்களுக்கு, யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் மூலம் முதல் முறையாக, 'தரங் சக்தி' என்ற பன்னாட்டு விமானப்படை பயிற்சி சூலூரில் நடந்து வருகிறது. இதில், இந்திய விமானப்படை வீரர்களுடன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, விமானப்படை வீரர்கள், கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்தனர்.
ஈஷாவில் உள்ள சூரிய குண்டம், சந்திர குண்டத்தில் குளித்துவிட்டு, தியானலிங்கம் மற்றும் ஆதியோகியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஆதியோகி திவ்ய தரிசன காட்சியை கண்டு வியந்தனர்.
ஈஷாவில், வீரர்கள் எளிய மற்றும் சக்தி வாய்ந்த 'நாடி சுத்தி, யோகா நமஸ்காரம்' என்ற யோக பேச்சுகளை கற்றுக் கொண்டனர்.
இந்த பயிற்சி, மன அழுத்தம் நிறைந்த பணி சூழ்நிலைகளை மிக இலகுவாகவும், தெளிவுடனும் கடந்து செல்ல உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஜெர்மனி நாட்டின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ் மற்றும் அதிகாரிகள், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

