1 லேப் டெக்னீசியன் பத்தாது ஆய்வு முடிவு லேட்டாகுது
1 லேப் டெக்னீசியன் பத்தாது ஆய்வு முடிவு லேட்டாகுது
ADDED : செப் 06, 2026 04:10 PM
கோவை: அரசு மருத்துவமனையில், உள்ள 2,500 படுக்கைகளுக்கு 55 லேப் டெக்னீசியன்கள் இருப்பது அவசியம். 30க்கு குறைவானவர்களே உள்ளனர். இதேபோல், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனைகள், துணை மாவட்ட மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் பணிபுரிய போதிய லேப் டெக்னீசியன்கள் இல்லை.
இதனால் 16 துறைகளில் இருந்து அனுப்பப்படும் பரிசோதனை முடிவுகளுக்கு இரு வாரங்களுக்கும் மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஒரே லேப் டெக்னீசியன் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய பணியிடங்கள் உருவாக்க கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க மாநில பொது செயலாளர் ஏழுமலை கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனைகளில், லேப் டெக்னீசியன் பணியிடம், 1990ல் உருவாக்கப்பட்டது. அதன்பின் பணியிடங்களை அதிகரிக்கவில்லை. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓய்வு பெற்ற லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பவே இல்லை. எம்.ஆர்.பி., போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பலர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களை நியமிக்கலாம். அதிக நோயாளிகள் வரும் அரசு மருத்துவமனைகளில், போதிய லேப் டெக்னீசியன்கள் இல்லாவிடில், அடுத்தகட்ட சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க புதிய பணியிடங்கள் உருவாக்கி நிரப்ப வேண்டும்,’’ என்றார்.
