ADDED : மார் 07, 2024 11:29 AM

சூலுார்:கோவை அருகே கோழிப் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 10 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த செலக்கரச்சல் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கோவை இன்ஸ்பெக்டர் துளசிமணி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர், செலக்கரச்சலில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த ஒரு அறையில், அரிசி மூட்டைகள் இருந்தன. அதை பரிசோதித்தபோது, ரேஷன் அரிசி என, உறுதி செய்யப்பட்டது. டி.எஸ்.பி., சந்திரசேகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைநடத்தினார்.
கோழிகளுக்கு தீவனமாக ரேஷன் அரிசியை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

