/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நாள் திட்ட தொழிலாளர்கள் கிராம சபையில் புகார்! அரசு நிர்ணயித்த சம்பளம் தருவதில்லை
/
100 நாள் திட்ட தொழிலாளர்கள் கிராம சபையில் புகார்! அரசு நிர்ணயித்த சம்பளம் தருவதில்லை
100 நாள் திட்ட தொழிலாளர்கள் கிராம சபையில் புகார்! அரசு நிர்ணயித்த சம்பளம் தருவதில்லை
100 நாள் திட்ட தொழிலாளர்கள் கிராம சபையில் புகார்! அரசு நிர்ணயித்த சம்பளம் தருவதில்லை
ADDED : டிச 20, 2024 08:10 PM

அன்னுார்: 'அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்குவதில்லை,' என 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கிராமசபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஏப். 1 முதல் நடப்பாண்டு மார்ச் 31 வரை, 100 நாள் வேலைத்திட்டத்தில் செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2021 வரை பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த சமூகத் தணிக்கை, கடந்த நான்கு நாட்களாக காரேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் நடந்தது. இதில் கள ஆய்வு செய்யப்பட்டது.
தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நல்லிசெட்டிபாளையத்தில் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.
கூட்டத்தில் வட்டார வள அலுவலர் கனகராஜ் தணிக்கை அறிக்கையில் வாசித்ததாவது :
2011ல் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பில் 105 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 22 பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது. ஆனால் ஒரு பயனாளி அந்தப் பட்டியலில் இல்லாதவர்.
அனைத்து பயனாளிகளும் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலை பார்க்க வேண்டும் ஆனால் ஒரு பயனாளி ஒரு நாள் கூட வேலை பார்க்கவில்லை. 100 நாள் திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் சரியாக இல்லை. கடந்தாண்டு 63 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கு 32 பணிகள் செய்யப்பட்டுள்ளன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில் இந்த திட்டம் குறித்த பெயர் பலகை இல்லை, இவ்வாறு தெரிவித்தார்.
தொழிலாளர்கள் பேசுகையில், ''அரசு நிர்ணயித்த 319 ரூபாய் சம்பளத்திற்கு பதில் 279 ரூபாய் தான் தினசரி வழங்குகின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் 100 நாட்களுக்கு மேல் வேலை தருகின்றனர்.
தனியார் தோட்டங்களுக்கு சென்றால் மிக அதிக தொலைவில் இருந்து மண் எடுத்து வந்து வரப்பு அமைக்கும்படி கூறுகின்றனர். கிராமசபை கூட்டத்திற்கு ஒரு சில கிராமங்களுக்கு மட்டும் வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளது. சில கிராமங்களுக்கு வாகன வசதி செய்யவில்லை.
அனைவருக்கும் 150 நாட்கள் வேலை தர வேண்டும் அரசு நிர்ணயித்த 319 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் பதிலளிக்கையில், 'ஒவ்வொரு தொழிலாளியும் ஏழு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். 2.5 மீட்டர் துாரத்திற்கு வரப்பு அமைக்க வேண்டும்.
ஆனால் 2.5 மீட்டர் துாரத்திற்கு வரப்பு அமைப்பதில்லை. நிர்ணயிக்கப்பட்ட வேலை செய்தால் மட்டுமே முழு சம்பளம் வழங்கப்படும் அல்லது செய்த வேலைக்கு ஏற்ப கூலி குறைத்து தரப்படும்.
100 நாள் திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள் மட்டுமே வேலை தரப்படுகிறது. அதற்கு மேல் ஒரு நாள் கூட தருவதில்லை.
ஒரு சிலர் ஊராட்சியில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். எந்த பாரபட்சமும் இல்லை. அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகள் உடனே சரி செய்யப்படும்,' என்றனர்.
கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் குருந்தா சலமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.